துபாய்: மைதானத்தில் இந்திய அண்டர் 19 வீரர்கள் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றும், இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ICC) முறைப்படி புகார் அளிக்க உள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
துபாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆனால், தோல்வியை தாண்டி மைதானத்தில் இரு அணி வீரர்களுக்கும் இடையே நடந்த மோதல் இப்போது பெரிதாக மாறி உள்ளது.

துபாயில் பரபரப்பாக நடந்த இந்த இறுதிப்போட்டியில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பலமுறை நேருக்கு நேர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். குறிப்பாக இந்திய வீரர்கள் அவுட் ஆகி வெளியேறும்போதும், பீல்டிங் செய்யும்போதும் பாகிஸ்தான் வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பாகிஸ்தான் பந்துவீச்சாளரிடம் தனது காலில் உள்ள ஷூவைக் காட்டி சைகை செய்தது பெரும் சர்ச்சையானது.
வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஜூனியர் அணிக்கு, அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவர் மோஷின் நக்வி, இந்திய அணியின் நடத்தை மீது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
அவர் பேசுகையில், "ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியின் போது இந்திய வீரர்கள் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களை வம்பிழுத்தனர். மைதானத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆத்திரமூட்டும் வகையில் இருந்தது. இது குறித்து நாங்கள் சும்மா இருக்கப்போவதில்லை. ஐசிசி-யிடம் இது தொடர்பாக முறைப்படி புகார் அளிக்க உள்ளோம். விளையாட்டையும் அரசியலையும் எப்போதும் தனித்தனியாகவே பார்க்க வேண்டும்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
முன்னதாக, பாகிஸ்தான் அண்டர் 19 அணியின் ஆலோசகராகச் செயல்பட்ட முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமதுவும் இந்திய அணியை விமர்சித்திருந்தார். "இந்திய வீரர்களின் நடத்தை கிரிக்கெட் உணர்வுக்கு எதிராக இருந்தது. அவர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டார்கள். இருப்பினும் எங்கள் வீரர்கள் கண்ணியத்துடனும், விளையாட்டு உணர்வுடனும் வெற்றியைக் கொண்டாடினார்கள்" என்று அவர் கூறியிருந்தார்.
மறுபுறம், இறுதிப்போட்டியில் மோசமாகத் தோற்றது குறித்தும், மைதானத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய U19 அணி கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஹரிஷிகேஷ் கனிட்கர் ஆகியோரிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. தோல்வி ஒருபக்கம் இருக்க, இப்போது இந்த விவகாரம் ஐசிசி வரை செல்லவிருப்பதால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் உறவில் மேலும் விரிசல் பெரிதாகும் சூழல் உருவாகியுள்ளது.
முன்னதாக சீனியர் ஆண்கள் அணி மோதிய 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா வெற்றி பெற்ற பிறகும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் மோஷின் நக்வி வெற்றிக் கோப்பையை அளிக்காதது சர்ச்சையாக நீடித்து வருகிறது. அதைத் தொடர்ந்து அண்டர் 19 அணி மோதிய இறுதிப் போட்டியும் சர்ச்சையாக மாறி உள்ளது.