IND vs PAK: இந்தியாவை வைத்து தேர்தல் கேம் ஆடும் பாகிஸ்தான்.. அதுவும் வங்கதேசத்திற்காக.. உண்மை என்ன?
லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பிப்ரவரி 12ஆம் தேதிக்குப் பிறகு தனது முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், இது ஒரு தேர்தல் நாடகம் என்றும், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பல்டி அடிக்கக்கூடும் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதுவும் வங்கதேச நாட்டில் நடக்கும் தேர்தலில் இந்தியா உடனான கிரிக்கெட் சர்ச்சையை வைத்து அரசியல் காய் நகர்த்துவதற்காக பாகிஸ்தான் உதவி செய்கிறது என கூறப்படுகிறது.

அரசியல்வாதி நக்வி
மொஹ்சின் நக்வி வெறும் கிரிக்கெட் வாரியத் தலைவர் மட்டுமல்ல, அவர் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். எனவே, அவர் ஒரு கிரிக்கெட் நிர்வாகியாகச் சிந்திப்பதை விட, ஒரு அரசியல்வாதியாகவே செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "அவர் ஒரு அரசியல்வாதி, தேசிய அணியின் நலனில் அவருக்குச் சிறிதும் அக்கறை இல்லை. தனது அரசியல் லாபத்திற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளார்" என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்..
வங்கதேச தேர்தல் தான் காரணம்
பாகிஸ்தானின் இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் வங்கதேச அரசியல் சூழலும் ஒரு காரணமாக உள்ளது. வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. அங்கு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு அமைந்தால், அரசியல் சூழல் மாறக்கூடும்.
தற்போதைய வங்கதேச அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறித்தான் பாகிஸ்தான் இந்தப் புறக்கணிப்பு நாடகத்தை அரங்கேற்றியது. தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்தால், பாகிஸ்தான் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி புறக்கணிப்பு நாடகத்தின் மூலம் பாகிஸ்தான் நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தோம் என அரசியல் லாபம் தேடலாம்என்பதும் நக்வியின் திட்டம் என்கிறார்கள்.
கடைசி நேர யூ-டர்ன்
வங்கதேச தேர்தல் பிப்ரவரி 12ஆம் தேதி நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைப்பட்ட இந்த இரண்டு நாட்களில் மொஹ்சின் நக்வி தனது முடிவை மாற்றிக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. "புதிய சூழல் உருவாகியுள்ளது" என்ற காரணத்தைக் கூறி, பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாட அனுமதி அளிக்கப்படலாம்.
தனிமைப்படுத்தப்படும் அபாயம்
ஒருவேளை தனது முடிவில் நக்வி உறுதியாக இருந்தால், உலக கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. ஐசிசி தனது ஆண்டு வருமானப் பங்கான $35 மில்லியனை (சுமார் ₹290 கோடி) நிறுத்தி வைக்கக்கூடும். மேலும் ஒளிபரப்பு நிறுவனங்களின் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் சந்திக்க நேரிடும். இந்த ஆபத்தை உணர்ந்துள்ள நக்வி, பிப்ரவரி 12-க்குப் பிறகு பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications