ஜோஹன்னஸ்பெர்க் : இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தங்களின் பச்சை நிற ஜெர்ஸி அணிந்து வராமல், பிங்க் நிற ஜெர்ஸி அணிந்து களமிறங்கினர்.
ஒரு நல்ல விஷயத்துக்காக தான் தென்னாப்பிரிக்கா அணி இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தென்னாப்பிரிக்க அணி ஆண்டுக்கு ஒரு முறை "பிங்க் மேட்ச்" என ஒரு போட்டியை ஒதுக்குகிறது.
அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் பிங்க் நிற ஆடை அணிந்து பங்கேற்பார்கள். இதுவரை 11 போட்டிகள் அது போல நடந்துள்ளது. இந்த பிங்க் நிற போட்டியில் கிடைக்கும் வருவாய் முழுவதும் மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு அறிவித்துள்ளது.

இது பற்றி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவர் போலேட்ஸி மொசெகி கூறுகையில், "கிரிக்கெட் ரசிகர்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மார்பக புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உதவ, விழிப்புணர்வு மட்டும் போதாது. செயல்திறன் மற்றும் பரிசோதனைக்கு மக்களை ஊக்குவிக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் பெண்களிடையே அதிகமாக இருக்கும் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் தான். ஆனால் இது ஆண்களையும் பாதிக்கலாம். முன்கூட்டியே கண்டறிதல் பயனுள்ள சிகிச்சை மற்றும் நேர்மறையான விளைவுக்கு வழிவகுக்கும்," என்று கூறினார்.
முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி கே எல் ராகுல் தலைமையில் களமிறங்கியது. சஞ்சு சாம்சன் நீண்ட நாட்கள் கழித்து போட்டியில் ஆட வாய்ப்பு பெற்றார். தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இந்தப் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகம் பெற்றார்.