ஜோஹன்னஸ்பெர்க் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான பிட்ச்சில், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை நம்பியே இந்திய அணி களமிறங்க உள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் பொதுவாகவே ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம். ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 300 ரன்களை எளிதாக எட்டும்.

அதே போல, எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் சேஸிங் செய்யும் அணி சாமர்த்தியமாக ஆடினால் சேஸிங் செய்து விடலாம். ஆனால், இங்கு சமீபத்தில் நடந்த இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியால் சேஸிங் செய்ய முடியவில்லை.
அந்த டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்தது. சேஸிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 95 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அதற்கு காரணம், சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தான். அவர்கள் இருவரும் சேர்ந்து 7 விக்கெட் வீழ்த்தினர்.
அதை வைத்துப் பார்க்கும் போது இந்த பிட்ச் தற்போது சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பு இருப்பது தெரிகிறது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தாலும், இரண்டாவதாக பேட்டிங் செய்தாலும் தென்னாப்பிரிக்க அணியின் வலுவான பேட்டிங் வரிசையை வீழ்த்த சுழற் பந்துவீச்சாளர்களை நம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்க அணியில் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போன ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசன், ஐடன் மார்கிரம், டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணியின் முதல் ஆறு விக்கெட்களை விரைவாக வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். பிட்ச்சின் காரணமாக அதை சுழற் பந்துவீச்சாளர்கள் தான் செய்ய வேண்டும்.
இந்தப் போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பேட்டிங் வரிசையில் ஆல் - ரவுண்டர் வேண்டும் என கருதினால் சாஹலுக்கு பதிலாக அக்சர் பட்டேல் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் மூவருமே திறமையான அனுபவ பந்துவீச்சாளர்கள் என்பதால் இந்திய அணி இவர்களை நம்பியே இந்த பிட்ச்சில் ஆட உள்ளது.