ராஞ்சி:தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் யார் களமிறங்க போகிறார் என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கின்றது. தொடக்க வீரரும் கேப்டன் சுப்மன் கில்லும் காயம் காரணமாக இந்த ஒரு நாள் தொடரில் விளையாடவில்லை.
இதனால் அவருக்கு பதில் ருதுராஜ், ஜெய்ஸ்வாலும் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.இதில் ருதுராஜ் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிசம்பர் 19ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

ஆனால் அண்மையில் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் ருதுராஜ் பட்டையை கிளப்பியிருந்தார். முதல் ஒருநாள் போட்டியில் 117 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 68 ரன்களும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் 25 ரன்களும் ருதுராஜ் அடித்திருந்தார்.
இதனால் பார்ம் படி ருதுராஜ்க்கு தான் தொடக்க வீரராக வாய்ப்பு தரப்பட வேண்டும். ஆனால் கம்பீர் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்க முடிவெடுத்து இருக்கிறார். நேற்று நடைபெற்ற பயிற்சி முகாமில் கூட ஜெய்ஸ்வால் தான் அதிக அளவு பேட்டிங் பயிற்சி செய்தார்.அப்போது கம்பீர் அவருடன் இணைந்து சில அறிவுரைகளை வழங்கினார். மேலும் கம்பீர் எப்போதுமே வலது கை, இடது கை காம்பினேஷனை விரும்புவார்.
இதனால் ஜெய்ஸ்வாலுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 23 வயதான ஜெய்ஸ்வால் இதுவரை ஒரே ஒரு நாள் போட்டியில் தான் விளையாடி 15 ரன்கள் அடித்திருக்கிறார். டி20 டெஸ்ட் என அனைத்திலும் அதிரடியாக ஆடக்கூடிய ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதே போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கில் தற்போது இல்லாத நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு இது நல்ல வாய்ப்பாக கிடைத்திருக்கிறது. டெஸ்ட் தொடரில் ஏமாற்றம் அடைந்த ஜெய்ஸ்வால் ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவை பழித்தீர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் ருதுராஜை பார்த்து ஒரு நாள் அணியில் மீண்டும் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.