டர்பன் : இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி இரவு எட்டு முப்பது மணிக்கு தொடங்குகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் டர்பனில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் முதல் டி20 யில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக அபிஷேக் ஷர்மாவுடன் களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது வீரராக இந்திய அணிக்கு பல மாதங்கள் கழித்து திரும்பிய திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். நான்காவது வீரராக சூரியகுமார் யாதவ் களமிறங்கலாம்.
ஐந்தாவது வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், ஆறாவது வீரராக அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கும் விளையாடலாம்.
ஏழாவது வீரராக அக்சர் பட்டேல், எட்டாவது வீரராக ரவி பிஸ்னாய் அல்லது வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் ஆர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் யாஷ் தயால் ஆகியோர் களமிறங்க கூடும்.
இந்த நிலையில் இரண்டு சுழற் பந்துவீச்சாளருக்கு பதில் ஒரு சுழல் பந்துவீச்சாளர் போதும் என இந்தியா நினைத்தால் ரவி பிஸ்னாய் இடத்தை நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஆல்ரவுண்டர் ரமந்திப் சிங் அல்லது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
உத்தேச பிளேயிங் லெவன்: 1. சஞ்சு சாம்சன், 2, அபிஷேக் சர்மா, 3, திலக் வர்மா, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6,ரிங்கு சிங், 7, அக்சர் பட்டேல், 8, ரவி பிஸ்னாய்/ வருண் சக்கரவர்த்தி,9, ஆர்ஸ்தீப் சிங், 10, யாஷ் தயால், 11, ஆவேஷ் கான்