செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்க்ஸில் இன்னும் 30 ஓவர்கள் களத்தில் நின்று ரன் சேர்த்தாலே இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை வெல்வது கடினமாக மாறி விடும்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பந்துவீச்சில் அதிக பவுன்ஸ் இருந்த இந்த மைதானத்தில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. கே எல் ராகுல் சதம் அடித்து, 101 ரன்கள் குவித்ததால் மட்டுமே இந்திய அணி 200 ரன்களை தாண்டியது.

இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 245 ரன்களுடன் ஆட்டமிழந்ததை அடுத்து தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் எய்டன் மார்கிரம் 5 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். துவக்கத்திலேயே விக்கெட் விழுந்ததால் இந்திய அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
மற்றொரு துவக்க வீரர் டீன் எல்கர் ஒருபுறம் நிலையாக நின்று ஆடினார். மறுபுறம் டோனி ஜோர்சி 28, கீகன் பீட்டர்சன் 2, டேவிட் பெட்டிங்காம் 56, கைல் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டீன் எல்கர் சதம் கடந்து அசத்தலாக ஆடினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 140, மார்கோ ஜான்சென் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 30 ஓவர்கள் நின்று ஆடினால் கூடுதலாக 100 ரன்களுக்கும் மேல் எடுத்து விடும். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணியை விட 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா, 100 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றால் இந்திய அணி இந்தப் போட்டியை வெல்வது மிகவும் கடினம்.
ஒருவேளை தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 100 ரன்கள் முன்னிலை பெற்றால், இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய அணி 400 ரன்கள் எடுத்தால் மட்டுமே தென்னாப்பிரிக்க அணிக்கு 300 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க முடியும். குறைந்தபட்சம் 250 ரன்களாவது வெற்றி இலக்கு நிர்ணயித்தால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்க்ஸிலேயே பவுன்ஸ் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியது குறிப்பிடத்தக்கது.