செஞ்சுரியன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது.
தோல்வியை தவிர்க்க வேண்டும் என்பதால் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணி இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.

செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்துள்ளது. இப்போதே இந்திய அணியின் ஸ்கோரை விட கூடுதலாக 11 ரன்கள் எடுத்துள்ளது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி கூடுதலாக ரன் சேர்த்தால் இந்திய அணி வெற்றி பெறுவது கடினமாக மாறி விடும். ஆனால், இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக கவாஸ்கர் கூறி இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக பேட்டிங் செய்வது சந்தேகம் என கூறப்படுகிறது.
தற்போது தென்னாப்பிரிக்க அணியின் டீன் எல்கர் 140 ரன்களுடனும், ஆல் - ரவுண்டர் மார்கோ ஜான்சென் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பவுமா பேட்டிங் செய்யாத பட்சத்தில் இவர்கள் இருவரை தவிர மற்ற அனைவரும் பந்துவீச்சாளர்கள் மட்டுமே. எனவே, இந்திய அணி மூன்றாம் நாள் துவக்கத்தில் எல்கர் மற்றும் ஜான்சென் விக்கெட்டை விரைவாக வீழ்த்தினால் முதல் இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்க அணியால் பெரிய முன்னிலையை பெற முடியாது என்றார் கவாஸ்கர்.
தென்னாப்பிரிக்காவை குறைந்த முன்னிலையில் ஆட்டமிழக்கச் செய்த பின், இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் குறைந்தது 250 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தால் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் தடுமாறி தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. ஆனால், இது எல்லாம் மூன்றாம் நாள் துவக்கத்தில் எல்கர் மற்றும் ஜான்சென் விக்கெட்டை இந்திய அணி விரைவாக வீழ்த்துவதில் தான் உள்ளது.