For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: "இப்படி ஒரு பிட்ச்சை கேட்டதே அவர்தான்".. தோல்விக்கு காரணம் யார் என்பதை உடைத்த கங்குலி

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா அடைந்த அதிர்ச்சித் தோல்வியைத் தொடர்ந்து, ஆடுகளத்தின் தன்மை குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. வெறும் 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்த முடியாமல், இந்திய அணி மொத்தமாக 93 ரன்களுக்குச் சுருண்டதற்கு, சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்ட தரமற்ற ஆடுகளமே காரணம் என விமர்சனங்கள் எழுந்தன.

வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவரான சவுரவ் கங்குலிதான், வேண்டுமென்றே இப்படி ஒரு ஆடுகளத்தைத் தயார் செய்தார் என ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய சவுரவ் கங்குலி, "இந்த ஆடுகளத்தை இப்படித் தயார் செய்யச் சொன்னதே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான்" என்று கூறி, அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

IND vs SA 1st Test Sourav Ganguly Blames Gautam Gambhir for Controversial Kolkata Pitch

மேலும், இந்தியாவின் தோல்விக்கு காரணமே கொல்கத்தா பிட்ச் தான் என கூறப்படும் நிலையில் அதை கேட்ட கவுதம் கம்பீர் தான் தோல்விக்கு காரணம் என்பதையும் கங்குலி சூசகமாக கூறி இருக்கிறார். ஸ்பின்னர்களை வைத்து மூன்று நாட்களில் போட்டியை முடிக்கலாம் என அவர் திட்டமிட்டதாக மறைமுகமாக கூறி இருக்கிறார் கங்குலி.

இது குறித்து சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில், தோல்வியின் முழுப் பழியையும் ஆடுகளத்தின் மீது போடுவதை ஏற்க மறுத்தார். "இதில் எந்தச் சர்ச்சையும் இல்லை. இது ஒரு சிறந்த டெஸ்ட் ஆடுகளம் இல்லைதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியா தோற்றுவிட்டது. ஆனாலும், அவர்கள் 124 ரன்களை எடுத்திருக்க வேண்டும். இது ஒன்றும் பேட்டிங் செய்யவே முடியாத ஆடுகளம் இல்லை."

"கம்பீர்தான், தங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு ஆடுகளம் வேண்டும் என்று கேட்டதாகவும், ஆடுகளப் பராமரிப்பாளரிடம் தாங்களே அறிவுறுத்தியதாகவும் கூறினார். ஆம், அது உண்மைதான். இந்த அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன" என்று கங்குலி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பதவிக் காலத்தின் தொடக்கத்தைப் பாராட்டிய கங்குலி, அவருக்கு ஓர் அன்பான அறிவுரையையும் வழங்கினார். "கௌதம் மீது எனக்கு மிகுந்த பிரியம் உண்டு. அவர் இந்தியாவுக்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். பயிற்சியாளராக அவர் தொடர்வார். ஆனால், நாம் நல்ல ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

"5 நாட்களில் ஜெயிக்கப் பாருங்க, 3 நாட்களில் அல்ல"

இந்திய அணியின் அணுகுமுறை குறித்தும் கங்குலி தனது கருத்தைப் பதிவு செய்தார். "மூன்று நாட்களில் டெஸ்ட் போட்டிகளை முடிக்க நினைக்காமல், ஐந்து நாட்கள் விளையாடி வெற்றி பெற வேண்டும்" என்று அவர் கூறினார். இது, சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களை உருவாக்கி, குறுகிய காலத்தில் போட்டிகளை முடிக்க நினைக்கும் இந்திய அணியின் தற்போதைய வியூகத்தைச் சாடுவதாக அமைந்தது.

மேலும், "பும்ரா, சிராஜ் மற்றும் குறிப்பாக முகமது ஷமி மீது அவர் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள்தான் இந்தியாவிற்கு டெஸ்ட் போட்டிகளை வென்று கொடுக்கும் உண்மையான மேட்ச் வின்னர்கள்" என்று கூறி, ஷமியை அணியில் இருந்து ஓரங்கட்டக் கூடாது என்ற செய்தியையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்தார்.

ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என உருவாக்கப்பட்ட இந்த ஆடுகளம், தென் ஆப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மருக்குச் சொர்க்கபுரியாக மாறியது. அவர் இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

சொந்த மண்ணில் விளையாடிய கடைசி ஆறு டெஸ்ட் போட்டிகளில், நான்கில் இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது. இது, சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களைத் தயாரிக்கும் வியூகம், தற்போது இந்தியாவுக்கே எதிராகத் திரும்புகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நவம்பர் 22-ம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. அதில் இந்திய அணி தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, தொடரைச் சமன் செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Monday, November 17, 2025, 7:38 [IST]
Other articles published on Nov 17, 2025
English summary
IND vs SA 1st Test: Sourav Ganguly Blames Gautam Gambhir for Controversial Kolkata Pitch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+