செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இன்னிங்க்ஸ் தோல்வி அவமானத்தை தவிர்க்க கடைசி நேரத்தில் விராட் கோலி போராடினார். ஆனால், அவர் போராட்டம் வீணானது. தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியை பதிவு செய்து தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ள நிலையில், முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 107 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. கோலி 38 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களும் எடுத்து இருந்தனர். அடுத்து வந்த கே எல் ராகுல் பின் வரிசை வீரர்களுடன் கூட்டணி அமைத்து ரன் சேர்த்தார். ராகுல் 101 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 245 ரன்கள் சேர்த்தது.
அடுத்து தென்னாப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்க்ஸில் 408 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் டீன் எல்கர் அபாரமாக ஆடி 185 ரன்கள் குவித்தார். அறிமுக வீரர் பெடிங்காம் ௫௬ ரன்களும், ஆல் - ரவுண்டர் மார்கோ ஜென்சென் ஆட்டமிழக்காமல் 84 ரன்களும் சேர்த்தனர்.
முதல் இன்னிங்க்ஸில் 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது. இந்தா முறை முதல் இன்னிங்க்சை விட மோசமாக விக்கெட்களை இழந்து 105 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
அந்த நிலையில் விராட் கோலி பின் வரிசை வீரர்களை வைத்துக் கொண்டு வேகமாக ரன் சேர்த்தார். குறைந்தபட்சம் இன்னிங்க்ஸ் தோல்வி என்ற அவமானத்தை தவிர்க்க வேண்டும் என அவர் போராடினார். எனினும், பின் வரிசை வீரர்களும் வேகமாக அவுட் ஆனார்கள். கோலி 82 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 131 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கோலியின் கடைசி நேர போராட்டமும் தோல்வியில் முடிந்தது. அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது.