மும்பை: இந்தியா,தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது t20 போட்டி சந்திக்காரில் இன்று நடைபெற்று வருகிறது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இங்கு நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு இருக்கிறது.

நான் இங்கு ஐபிஎல் தொடரில் நிறைய ஆட்டங்களில் விளையாடி இருக்கின்றேன். இங்கு மகளிர் சர்வதேச போட்டியும் நடந்தது. ஆடவர் பிரிவில் தற்போது தான் இங்கு முதல் சர்வதேச போட்டி நடைபெறுகிறது என்று நினைக்கின்றேன். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாடுவது மிகவும் முக்கியம்.
அதுதான் அணி எதிர் பார்க்கிறது. முதல் போட்டியில் 175 ரன்கள் என்பது சாதாரண இலக்கு தான். ஆனால் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றியை தேடித் தந்தார்கள். ஹர்திக் பாண்டியா அணியில் இருப்பது எங்கள் அணியின் பேலன்ஸ் சிறப்பாக மாற்றி இருக்கிறது. அவர் சிறப்பாக அழுத்தத்தையும் நெருக்கடிகளையும் கையாளுகின்றார்.
அவருடைய பந்துவீச்சும் அடிக்கும் முக்கியமாக விளங்குகிறது. இன்றைய ஆட்டத்திலும், எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் மார்க்கரம், நாங்களும் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம்.
ஆடுகளம் நன்றாக இருக்கின்றது. ஆனால் தற்போது முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவை அழுத்தத்துக்கு உள்ளாக்க வேண்டும். முதல் டி20 போட்டியில் நாங்கள் படுதோல்வியை அடைந்தோம். எனினும் டி20 கிரிக்கெட்டில் இப்படி நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறோம். முதல் சில ஓவர்களில் பேட்டிங் செய்து விட்டு அதன் பிறகு இந்த ஆடுகளத்தில் எவ்வளவு ரன்கள் இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பதை கணித்து விளையாடுவோம். எங்கள் அணியில் இன்று மூன்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்டப்ஸ், கேசவ் மகாராஜா மற்றும் ஆண்ரிச் நோக்கியா ஆகியோர் இன்று விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக ரீசா ஹென்றிக்ஸ், பார்ட்மேன் மற்றும் ஜார்ஜ் லிமிடே ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.