கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு குறையாக இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். முதல் நாளில் ஆறு விக்கெட்டுகளை எடுத்து 247 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த இந்திய அணி கடைசி நான்கு விக்கெட்டுகள் எடுக்க அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து விட்டதாக புஜரா விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நமது பவுலர்கள் இன்று கடும் உழைப்பை போட்டு இருக்கிறார்கள். ஆனால் முடிவு நமக்கு சாதகமாக செல்லவில்லை. நிச்சயமாக ட்ரெஸ்ஸிங் ரூமில் பல ஏமாற்றங்கள் இருக்கும். முதல் நாளில் நாம் 250 கீழ் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினோம்.

எஞ்சிய நான்கு விக்கெட்டுகளை 100 அல்லது 125 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் அது மகிழ்ச்சியை தந்திருக்கும். ஆனால் 489 ரன்கள் என்பது மிகவும் அதிகம். 350 ரன்கள் இருந்தால் கூட அதை நாம் வரவேற்று இருக்கலாம். அதை ஒரு மோசமான பௌலிங் என்றும் சொல்லியிருக்க முடியாது.
ஆடுகளத்தின் தன்மை கொஞ்சம் மாறி இருந்தது, இதற்கு காரணமாக இருந்திருக்கும். ஆடுகளம் தோய்வாக மாறி இருந்ததால், வேகப்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கின்றேன். ஏமாற்றமாக இருந்தாலும் போட்டி இன்னும் முடியவில்லை என்று புஜாரா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல், இந்திய அணி நாளை ஒரே நாளில் 400 ரன்கள் குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்திய அணி ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் என அதிரடியாக விளையாட முயற்சி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 350 ரன்களுக்கு மேலாவது எடுக்க வேண்டும். அதற்கு ஜெய்ஸ்வால் களத்தில் அதிக நேரம் நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபாகரீம், இந்திய அணி 600 ரன்கள் மேல் குவித்து பின்னர் தென்னாப்பிரிக்காவை பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
600 ரன்கள் மேல் அடிக்க வேண்டும் என்றால் இந்திய அணி வேகமாக ரன்கள் சேர்ப்பது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். இல்லை என்றால் தென்னாப்பிரிக்கா அடிக்கும் ஸ்கோர் அருகே வரை சென்று விட்டு, பின்னர் தென்னாப்பிரிக்காவை விரைவாக ஆட்டமிழக்க வைத்து நான்காவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா நிர்ணயிக்கும் இலக்கை விரைவாக எட்ட வேண்டும் என்றும் சபாகரீம் கூறியுள்ளார்.