கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய நிலையில், கவுகாத்தி மைதானத்தின் பிட்ச் குறித்துச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது கிரிக்கெட் பிட்ச் போல இல்லை, 'ரோடு' போல இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் போராடியே அந்த அணியை 'ஆல்-அவுட்' செய்ய முடிந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குல்தீப் யாதவ்விடம், கொல்கத்தா மைதானத்திற்கும் கவுகாத்தி மைதானத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்: "கொல்கத்தா விக்கெட் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் இது முழுவதுமாக ரோடு போல உள்ளது. பந்துவீச்சாளர்களுக்கு இது சவாலானதுதான். அதனால்தான் இதை டெஸ்ட் கிரிக்கெட் என்று அழைக்கிறோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எல்லா நேரங்களிலும் நாம் ஆதிக்கம் செலுத்த முடியாது. பேட்டிங்கிற்குச் சாதகமான இத்தகைய ஆடுகளங்களில் நாம் எப்படி மீண்டு வருகிறோம் என்பது மிக முக்கியம். தனிப்பட்ட முறையில், இந்த விக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பெரிய அளவில் ஸ்விங் ஆகவில்லை.
முதல் நாள் காலையில் பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தது, அதனால் லேசாகப் பந்து திரும்பியது. ஆனால் அதன் பிறகு பேட்டிங் செய்ய மிகவும் எளிதாகிவிட்டது. பந்து திரும்பவே இல்லை என்று நானும் ஜடேஜாவும் பேசிக்கொண்டோம்" என்று குல்தீப் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
இந்தத் தட்டையான பிட்சிலும் சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப் யாதவ், 29.1 ஓவர்கள் வீசி 115 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், இளம் வீரர்கள் இதுபோன்ற கடினமான சூழல்களில் விளையாடி கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். "இது டெஸ்ட் கிரிக்கெட், இதை நாம் அனுபவித்து விளையாட வேண்டும். பிட்ச் சரியில்லை என்று அதிகம் யோசிக்காமல், நம்முடைய பணியைச் செய்ய வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டியில் இதைவிடச் சிறந்த விக்கெட் கிடைக்கலாம், அதனால் புகார்கள் ஏதுமில்லை" என்று பக்குவமாக பதிலளித்தார் குல்தீப் யாதவ்.
தற்போது தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்துள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 480 ரன்கள் பின்தங்கியுள்ளதால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.