கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அணியின் தற்காலிக கேப்டன் ரிஷப் பண்ட்டின் 'உடல் மொழி' குறித்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது அந்த அணி, 'டிக்ளேர்' செய்ய அவசரம் காட்டாமல், இந்திய பந்துவீச்சாளர்களை மேலும் சோர்வடையச் செய்தது. ஏற்கனவே 0-1 எனத் தொடரில் பின்தங்கியுள்ள இந்தியா, இந்த டெஸ்டிலும் தோற்றால் சொந்த மண்ணில் முழுத் தொடர் தோல்வி அடையும் அவல நிலைக்குத் தள்ளப்படும்.

போட்டியின் இந்த இக்கட்டான சூழலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 'X' (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "இரண்டாவது இன்னிங்ஸில் நாம் பேட்டிங் செய்யும்போது மீண்டு வருவோம் என்று நான் நம்புகிறேன். ஆனால், களத்தில் வீரர்களின் உடல் மொழியைப் பார்க்கும்போது, அது மனதை உடைப்பதாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வின் நேரடியாக யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், கேப்டனாக அணியை வழிநடத்தும் ரிஷப் பண்ட்டின் சோர்வான உடல் மொழி இடம் பெற்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விலகியதால், இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் கேப்டனாகப் பொறுப்பேற்றார். ஆனால், கேப்டன் பொறுப்பை அவர் உணர்ந்து செயல்படவில்லை என்றே தெரிகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, அவர் ஆடிய விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் பொறுப்பற்ற முறையில் இறங்கி வந்து அடித்து, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேறினார்.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறுகையில், "இது ஒன்றும் கொல்கத்தா பிட்ச் போல பந்துவீச்சுக்குச் சாதகமான பிட்ச் கிடையாது. இது பேட்டிங் செய்ய நல்ல பிட்ச். கொஞ்சம் பொறுமையாக நின்றிருக்க வேண்டும். மார்கோ ஜான்சன் ஒன்றும் 20 ஓவர் தொடர்ந்து வீசப்போவதில்லை. இது டெஸ்ட் கிரிக்கெட். 'செஷன்' வாரியாக பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் பண்ட் அதைச் செய்யத் தவறிவிட்டார்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவிக்க, இந்திய அணி வெறும் 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 288 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்கா, தொடர்ந்து ரன்களைக் குவித்து இந்திய அணிக்கு 549 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
பேட்டிங்கில் சொதப்பியது மட்டுமின்றி, கேப்டனாகவும் களத்தில் உற்சாகமின்றி இருப்பது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வின் கூறியது போல, இந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்து இந்திய அணி போராடுமா என்பது சந்தேகமே.