Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: 38வது இந்திய டெஸ்ட் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.. சுப்மன் கில் 2வது டெஸ்ட்டில் நீக்கம்

கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக, அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்துவார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 38வது கேப்டன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெறுகிறார்.

கடந்த வாரம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது சுப்மன் கில்லின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர், 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் களத்தில் இருந்து வெளியேறி, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

IND vs SA 2nd Test Rishabh Pant Becomes India s 38th Test Captain Shubman Gill Ruled Out Due to Injury

ஒரு நாள் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். பின்னர் இந்திய அணியுடன் கவுஹாத்திக்குப் பயணம் செய்தாலும், பயிற்சி அமர்வுகளில் அவரால் முழுமையாகப் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

"சுப்மன் கில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியை எட்டவில்லை. எனவே, காயத்தின் தீவிரத்தன்மையை மேலும் ஆராய்வதற்காக அவர் மும்பைக்கு அனுப்பப்படுவார். ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கேப்டனாக செயல்படுவார்" என்று பிசிசிஐ தனது அறிக்கையில் கூறி உள்ளது.

சுப்மன் கில் விலகியதால், கேப்டன் பொறுப்பை ஏற்கும் ரிஷப் பண்ட், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 38வது கேப்டன் ஆவார். மேலும், ஜாம்பவான் தோனிக்குப் பிறகு, இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் 2வது விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் பண்ட் படைக்க இருக்கிறார். ரிஷப் பண்ட் இந்திய அணிக்குக் கேப்டனாக இருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன், 2022-ல் 5 டி20 போட்டிகளில் இந்திய அணியை அவர் வழிநடத்தியுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

புதிய கேப்டனாகப் பொறுப்பேற்கும் ரிஷப் பண்ட் முன் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, இந்தத் தொடரைச் சமன் செய்ய வேண்டும் என்றால் கவுஹாத்தியில் சனிக்கிழமை தொடங்கும் இரண்டாவது போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இந்த போட்டியில் தோற்றால், ஒரு வருடத்திற்குள் சொந்த மண்ணில் இரண்டாவது டெஸ்ட் தொடரை இழக்கும் மோசமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்படும்.

மேலும், கவுஹாத்தியின் பர்சபரா மைதானத்தில் நடக்கப் போகும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது, இந்தியாவில் டெஸ்ட் போட்டி நடைபெறும் 30வது மைதானமாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியில், இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு ரிஷப் பண்ட் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.

Story first published: Friday, November 21, 2025, 13:25 [IST]
Other articles published on Nov 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+