கவுகாத்தி: தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை, இந்திய மண்ணிலேயே வைத்து ஒயிட்வாஷ் அடையச் செய்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 25 ஆண்டுகளில் முதன்முறையாக, இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்று, அதுவும் 'ஒயிட்வாஷ்' செய்து வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம், இந்திய மண்ணில் ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணிக்குக் கிடைத்த மிகப்பெரும் தோல்வியாக இது அமைந்துள்ளது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஏழாம் வரிசை வீரர் செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி 109 ரன்கள் சேர்த்தார். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மார்கோ ஜான்சன், ஒன்பதாம் வரிசையில் இறங்கி 93 ரன்கள் அடித்து அணியின் பெரிய ஸ்கோருக்கு உதவினார்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியபோது வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்கள் எடுத்திருந்தார், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்திருந்தார். மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
இந்தியா 288 ரன்கள் பின்தங்கி இருந்தபோதும், தென்னாப்பிரிக்கா 'ஃபாலோ-ஆன்' கொடுக்கவில்லை. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. நான்காம் நாள் வரை இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்து 'டிக்ளேர்' செய்தது. இந்திய அணிக்கு 549 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
சுமார் 110 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இந்திய அணியால் இந்த இலக்கை எட்ட முடியாது; ஆனால் டிரா செய்ய முயற்சிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் நான்காம் நாள் முடிவிலேயே துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரும் பத்து ஓவர்களுக்குள்ளாகவே தங்களது விக்கெட்டுகளை இழந்திருந்தனர்.
அடுத்த ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு இந்திய அணி டிரா செய்ய முயற்சிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சாய் சுதர்சன் 139 பந்துகளைச் சந்தித்து 14 ரன்கள் மட்டும் எடுத்து டிரா செய்வதற்காகப் போராடினார். ஆனால் மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
ரவீந்திர ஜடேஜா அதிரடி பாணியைக் கடைபிடித்து ஆடினார். அவர் 87 பந்துகள் சந்தித்து 54 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்களால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதை அடுத்து இந்திய அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென்னாப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதை அடுத்து தென்னாப்பிரிக்கா 408 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது.