லக்னோ: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மிக முக்கியமான நான்காவது டி20 போட்டியில், இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தொடர் பேட்டிங் சொதப்பல் காரணமாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், லக்னோவில் நிலவும் பனிமூட்டம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரை வெல்லும் முனைப்பில் லக்னோவில் 4-வது போட்டி நடைபெறுகிறது.

இந்தத் தொடர் முழுவதுமே சுப்மன் கில்லின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. முதல் போட்டியில் 4 ரன்கள், இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆனார். அடுத்து மூன்றாவது போட்டியில் 118 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டும்போதும், 28 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.
டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு அவரது ஆட்டம் இல்லை என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். அவருக்குப் பதிலாகப் ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனைத் தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், சுப்மன் கில்லுக்கு பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, 4வது டி20 போட்டியில் அவர் சேர்க்கப்படவில்லை என்று தகவல்வெளியானது. இது சஞ்சு சாம்சனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 3 டி20 சதங்களை விளாசிய சஞ்சு, தொடக்க வீரராகக் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே லக்னோவில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மைதானம் தெளிவாகத் தெரியாத சூழல் உள்ளது. திட்டமிட்டபடி இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு டாஸ் போடப்படவில்லை. பனிமூட்டம் விலகிய பிறகே டாஸ் போடப்படும் என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருப்பதால், இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.