அகமதாபாத்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் நடக்கவிருந்த கடந்த போட்டியின் போதே சுப்மன் கில்லுக்கு பாதத்தில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த காயம் முழுமையாக குணமாகாததால், இந்தப் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சுப்மன் கில் வெளியேறியதால், நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருந்த சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. இது சஞ்சு சாம்சன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் துவக்க வீரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ் இழந்தது குறித்துப் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "உண்மையில் நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் விரும்பினோம். ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாக இருக்கிறது. பெரிய அளவில் பனிப்பொழிவு இருக்காது என்று நினைக்கிறேன். அதனால் முதலில் ரன்களை குவித்து எதிரணிக்கு நெருக்கடி கொடுப்போம். அணியில் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் வந்துள்ளார். பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பியுள்ளனர்" என்றார்.
பந்துவீச்சை தேர்வு செய்தது குறித்துப் பேசிய மார்க்ரம், "இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று கணிக்கிறோம். அதனால் சேஸிங் செய்வது எளிதாக இருக்கும். இது எங்களுக்கு மிக முக்கியமான போட்டி" என்றார். அந்த அணியில் நோர்ட்ஜேவுக்கு பதிலாக ஜார்ஜ் லிண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவ துபே, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
ரீசா ஹென்ட்ரிக்ஸ், குவின்டன் டி காக், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டெவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் ஃபெரீரா, மார்கோ யான்சன், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், லுங்கி இங்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்.
சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி அகமதாபாத் மைதானத்தில் அதிரடி காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.