டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடைசியாக இந்திய அணிக்காக ஆடிய 8 டி20 இன்னிங்ஸ்களில் அபிஷேக் சர்மா வெறும் 70 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய ரசிகர்களுக்காக ஒளிபரப்பாளர்கள் ஆட்டத்தை 7.30 மணிக்கு தொடங்கியதால், போட்டி பகலிரவு போட்டியாக நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

அதேபோல் டாஸ் போடப்பட்ட பின் சில நிமிடங்கள் மழை பெய்தது. இதனால் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதை கணித்து தென்னாப்பிரிக்கா முடிவு எடுத்துள்ளது. இதன்பின் இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் முதல் ஓவரை வீச மார்கோ யான்சன் அழைக்கப்பட்டார்.
முதல் ஓவரின் 3வது பந்திலேயே சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, இந்திய அணி ரசிகர்கள் பரபரப்பாகினர். தொடர்ந்து 2வது ஓவரை வீசிய கோட்சியே பவுலிங்கில் அதிரடியாக பவுண்டரி விளாசி அபிஷேக் சர்மா அட்டகாசமாக தொடங்கினார். ஆனால் அடுத்த 3 பந்துகளில் அபிஷேக் சர்மா ரன்கள் எடுக்க முடியாமல் திணற, இதனை கணித்து கோட்சியே பவுன்சர் பந்தை வீசினார்.
அதனை தூக்கியடிக்க முடிவு செய்து அபிஷேக் சர்மா, பேட்டை ஓங்க அது டாப் எட்ஜாகியது. அதனை ஃபைன் லெக் திசையில் நின்றிருந்த மார்கோ யான்சன் எளிதாக கேட்ச் பிடித்தார். இதனால் அபிஷேக் சர்மா வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா, அதன்பின் விளையாடிய 8 இன்னிங்ஸ்களில் வெறும் 70 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். சொந்த மண்ணில் விளையாடிய வங்கதேச டி20 தொடரிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். தற்போது தென்னாப்பிரிக்கா மண்ணிலும் அடுத்தடுத்து 2 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தை ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இதனால் சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இல்லாத போது இந்திய அணி நிர்வாகம் கொடுத்துள்ள வாய்ப்பை அபிஷேக் சர்மா வீணடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே அவரின் ஷாட் தேர்வுகள் மோசமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், மீண்டும் மோசமான ஷாட்டை விளையாடி வெளியேறி இருக்கிறார்.