சண்டிகர்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்தது தென்னாப்பிரிக்கா. முதல் போட்டியில் 74 ரன்களில் சுருண்ட அவமானத்தை மறந்து, இரண்டாவது போட்டியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதற்கான காரணத்தை தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் போட்டிக்குப் பிறகு விளக்கினார்.
வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய மார்க்ரம், குயின்டன் டி காக் மற்றும் தனது பந்துவீச்சாளர்களை வெகுவாகப் பாராட்டினார். டி காக் 46 பந்தில் 90 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 213 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

அது பற்றி பேசிய மார்க்ரம், "இன்று எங்களது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. குயின்டன் டி காக் ஆடிய விதம் மிகவும் ஸ்பெஷலானது. அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளமும், கடைசி நேரத்தில் மிடில் ஆர்டர் வீரர்கள் கொடுத்த பங்களிப்பும் எங்களை ஒரு மிகச்சிறந்த ஸ்கோருக்கு (213 ரன்கள்) அழைத்துச் சென்றது" என்று வெற்றிக்கான காரணத்தை விளக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "முதல் போட்டியிலேயே எங்கள் பந்துவீச்சாளர்கள் நன்றாகத் தான் வீசினார்கள். பேட்ஸ்மேன்கள் தான் சொதப்பினார்கள். இன்று பந்துவீச்சு இன்னும் சிறப்பாக இருந்தது. எங்கள் பந்துவீச்சு யூனிட் சரியான திசையில் பயணிக்கிறது. ஃபீல்டிங்கும் இரண்டு போட்டிகளிலுமே அற்புதமாக உள்ளது" என்று இந்தியாவை வீழ்த்தியது பற்றி குறிப்பிட்டார் மார்க்ரம்.
ஆடுகளம் குறித்துப் பேசிய மார்க்ரம், "இது ஒரு நேர்மையான ஆடுகளம். புதிய பந்து இருக்கும்போது பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைத்தது. ஆனால் டி காக் மற்றும் திலக் வர்மா ஆடியதைப் பார்த்தால், பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்றால் பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பது புரிந்தது. இது ஒரு அருமையான கிரிக்கெட் மைதானம்," என்று விவரித்தார்.
வீரர்களை அடிக்கடி மாற்றுவது குறித்துக் கேட்டதற்கு, "உலகக்கோப்பைக்குத் தயாராவதே எங்களின் முதல் நோக்கம். அதனால்தான் சிலருக்கு ஓய்வு கொடுத்து, சிலரைச் சுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம். வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது முக்கியம் தான் என்றாலும், உலகக்கோப்பைக்குச் சிறந்த அணியைத் தேர்வு செய்ய இது அவசியம்" என்று விளக்கினார்.
தனது பேட்டிங் இடம் (No.5) குறித்துப் பேசிய அவர், "அணிக்கு என்ன தேவையோ அதைச் செய்ய வேண்டும். 5-வது இடத்தில் ஆட ஆள் தேவைப்பட்டது, டாப் ஆர்டரில் மற்றவர்கள் இருந்ததால் நான் அந்தப் பொறுப்பை ஏற்றேன். அணியை விட யாரும் பெரியவர்கள் இல்லை. இந்த மனநிலை எங்கள் அணியில் பலரிடம் உள்ளது. என்னுடைய பேட்டிங்கில் நான் இன்னும் கொஞ்சம் ரன் சேர்த்திருக்கலாம். அதைத் திருத்திக்கொண்டு அடுத்த போட்டிக்குத் தயாராவோம்" என்று மார்க்ரம் கூறினார்.