தர்மசாலா: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அதிரடியாக ரன் குவித்த அபிஷேக் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்குக்கு அந்த விருது வழங்கப்பட்டது ரசிகர்களுக்குச் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தர்மசாலாவில் நடந்த இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 117 ரன்களுக்குச் சுருண்டது. எளிய இலக்கை விரட்டிய இந்தியா 15.5 ஓவர்களில் வெற்றி பெற்றது. உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, இந்திய அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். வெறும் 18 பந்துகளைச் சந்தித்த அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.

அபிஷேக் சர்மா சிறப்பாக ஆடினாலும், தென்னாப்பிரிக்காவை குறைந்த ரன்களில் சுருட்டியதில் அர்ஷ்தீப் சிங்கின் பங்கு மிக முக்கியமானது. அவர் வீசிய 4 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரீசா ஹென்ரிக்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் என முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி ரேட் வெறும் 3.25 ஆக மட்டுமே இருந்தது.
மற்ற பந்துவீச்சாளர்களான ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், அர்ஷ்தீப் சிங் மிகக் குறைவான ரன்களைக் கொடுத்து நெருக்கடி உண்டாக்கியதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற பிறகு பேசிய அர்ஷ்தீப் சிங், இந்த விருதை மைதானத்திற்கு வந்திருந்த தனது சகோதரியின் மகளான 10 மாதக் குழந்தைக்கு சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஒரு முக்கிய சாதனையும் படைத்தார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரீசா ஹென்ரிக்ஸை எல்பிடபிள்யூ செய்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்கள்) அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற புவனேஷ்வர் குமாரின் சாதனையை முறியடித்தார்.
புவனேஷ்வர் குமார் பவர் பிளே ஓவர்களில் 47 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் தற்போது 48 பவர்பிளே விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். உலக அளவில் டிம் சவுதி (58 விக்கெட்கள் மற்றும் ஷாஹீன் அப்ரிடி (55 விக்கெட்கள்) ஆகியோருக்குப் பிறகு அர்ஷ்தீப் சிங் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.