செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் ஒரு சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே இடம் பெறுவார் என கூறப்படுகிறது.
அதற்கு காரணம், கடந்த மூன்று முறை தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. மூன்று டெஸ்ட் தொடர்களிலும் சேர்த்தே சுழற் பந்துவீச்சாளர் மொத்தம் 16 விக்கெட்கள் தான் வீழ்த்தி உள்ளனர்.

இதில் இருந்தே தென்னாப்பிரிக்க பிட்ச்கள் டெஸ்ட் போட்டிகளில் எந்த அளவுக்கு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த நிலையில், இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் ஆட வைப்பது போல, தென்னாப்பிரிக்காவில் ஆட வைத்தால் அதனால் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் தான் தற்போது டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் - ரவுண்டராக இருக்கும் நிலையில் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது. எனவே, அஸ்வினை வெளியே அமர வைத்து விட்டு ஜடேஜா இந்தப் போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது.
அதே போல, முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள செஞ்சுரியன் ஆடுகளத்தில் முதல் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என கூறப்படும் நிலையில், வேகப் பந்துவீச்சுக்கு அந்த ஆடுகளம் அதிகம் ஒத்துழைக்கும். எனவே, இந்திய அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.
பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் ஆகிய நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இவர்களில் ஷர்துல் தாக்குர் ஆல் - ரவுண்டர் என்ற அடிப்படையில் அணியில் வாய்ப்பு பெறுவார். பிரசித் கிருஷ்ணா 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் என்பதால் எளிதாக பவுன்ஸ் பந்துகளை வீச முடியும் என்ற அடிப்படையில் அணியில் இடம் பெறுவார்.