டர்பன்: இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தரப்பில் ரூ.440 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த 3 வடிவங்களுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணி 3 கேப்டன்களுடன் களமிறங்கவுள்ளது.

டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ், ஒருநாள் அணிக்கு கேஎல் ராகுல், டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா என்று 3 கேப்டன்கள் செயல்படவுள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரே சுற்றுப்பயணத்தில் 3 அணிகளுக்கும் 3 கேப்டன்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனால் இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்த விவாதமும் எழுந்துள்ளது.
அதேபோல் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் சுற்றுப்பயணம் காரணமாக ரூ.440 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நஷ்டத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம், மொத்தமாக இந்திய அணியின் சுற்றுப்பயணத்தின் மூலமாக ஈடுகட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்பதால், இம்முறை இந்திய அணி வரலாற்றை மாற்றுமா என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அதற்கேற்ப இந்திய அணி வீரர்கள் அனைவரும் உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 50க்கும் அதிகமாக இருப்பதால், அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்காள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் கணக்குகள் இந்திய அணியின் பலத்தை நிரூபித்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.