செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார பெற்றி பெற்ற நிலையில், அதை எப்படி செய்தோம் என விளக்கி இருக்கிறார் அந்த அணியின் தற்காலிக கேப்டன் டீன் எல்கர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக 19 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் போட்டியில் இருந்து விலகினார். மூத்த வீரர் டீன் எல்கர் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தினார்.

தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ரபாடா முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். பர்கர் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த போது இந்திய அணியில் பும்ராவை தவிர, சிராஜ், பிரசித், ஷர்துல் என மற்ற மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
பும்ரா 4, சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆனால், அதற்குள் தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் குவித்தது. டீன் எல்கர் 185 ரன்களும், மார்கோ ஜான்சென் 84 ரன்களும் குவித்தனர். அதன் பின் இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 131 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்தது. இரண்டாம் இன்னிங்க்ஸில் ரபாடா 2, பார்கர் 4 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த நிலையில், இந்திய அணியால் 10 விக்கெட்களை விரைவாக வீழ்த்த முடியவில்லை. ஆனால், தென்னாப்பிரிக்க அணி எளிதாக இரண்டு இன்னிங்க்ஸிலும் சேர்த்து 20 விக்கெட்களை வீழ்த்தியது. அதுவே இந்தப் போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியதாக விளக்கினார் டீன் எல்கர்.
போட்டி முடிந்தவுடன் பேசிய டீன் எல்கர், "இந்தப் போட்டி மிகவும் சிக்கலானது. அதனால், அனைத்தையும் எளிமையாக கையாண்டோம். வேகப் பந்துவீச்சாளர்களும், ஒரு ஸ்பின்னரும் 20 விக்கெட்களை வீழ்த்த வேண்டும். அப்படி செய்தால் தான் டெஸ்ட் போட்டியை வெல்ல முடியும். ரபாடா சிறப்பாக செயல்பட்டார். பர்கர் ஏன் தென்னாப்பிரிக்க அணியின் எதிர்காலமாக கருதப்படுகிறார் என்பதை காட்டி இருக்கிறார்." என்றார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 முதல் துவங்க உள்ளது. அந்தப் போட்டியில் வென்றால் இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் செய்யலாம். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது.