Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"முதல் பந்தில் இருந்தே சிக்ஸ் அடிக்கணும் என்றால்”.. இந்திய வீரர்களை வெளுத்த கொல்கத்தா பராமரிப்பாளர்

கொல்கத்தா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெறும் இரண்டரை நாட்களில் முடிந்த நிலையில், ஈடன் கார்டன் ஆடுகளம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், "வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?" என்று ஆடுகளத்தின் தலைமைப் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா - ஆப்பிரிக்கா டெஸ்டில், பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். ஐந்து நாட்கள் போட்டி, இரண்டரை நாட்களில் முடிந்தது. அதில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்த முடியாமல் இந்திய அணி வெறும் 93 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்கக் கேப்டன் டெம்பா பவுமா மட்டுமே இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த ஒரே வீரர் ஆவார்.

IND vs SA Eden Gardens Curator Sujan Mukherjee Hits Back at Critics says batsmen can t bat

போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "நாங்கள் கேட்டது போன்ற ஆடுகளம்தான் இது. இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பேட்ஸ்மேன்கள்தான் சரியாக விளையாடி அழுத்தத்தைக் கையாளத் தவறினர்" என்று கூறியிருந்தார். கம்பீரின் இந்தக் கருத்து, சர்ச்சையை மேலும் அதிகரித்தது.

சுஜன் முகர்ஜியின் விளக்கம்

முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆடுகளத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சுஜன் முகர்ஜி தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், "நான் இப்போதும் சொல்கிறேன், இந்த ஆடுகளம் ஒரு நல்ல ஆடுகளம். பயிற்சியாளர் கம்பீரே தாங்கள் எப்படிப்பட்ட ஆடுகளத்தைக் கேட்டோம் என்று வெளிப்படையாகக் கூறிவிட்டார். இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது? ஒரு நல்ல ஆடுகளத்தை வழங்குவது என் வேலை, எனக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படியே அதைத் தயாரித்தேன்" என்றார்.

மேலும் அவர், "வீரர்கள் அதில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது. இதே ஆடுகளத்தில்தானே டெம்பா பவுமாவும் ரன்கள் எடுத்தார்? இது டெஸ்ட் கிரிக்கெட், இங்குப் பொறுமையுடன் உங்களை நிலைநிறுத்திக்கொண்டு ஆட வேண்டும். முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் வந்தால், உங்களால் நிலைத்து நிற்க முடியாது" என்று முகர்ஜி கூறினார்.

பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலியும், "இந்திய அணி நிர்வாகம் கேட்டபடியே ஆடுகளம் தயாரிக்கப்பட்டது. இதில் பராமரிப்பாளரைக் குறை சொல்ல முடியாது" என்று முகர்ஜிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தார். இந்திய அணியின் தோல்விக்கு ஆடுகளத்தின் தன்மை ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டாலும், அணி நிர்வாகமே அத்தகைய ஆடுகளத்தைக் கேட்டது என்ற தகவல் தற்போது விவாதத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

Story first published: Tuesday, November 18, 2025, 8:00 [IST]
Other articles published on Nov 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+