பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக 8 வெற்றிகளையும், இந்திய அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளிலும் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.
இதனால் எந்த அணிக்கு டி20 உலகக்கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் பிரபல விஞ்ஞான ஜோதிடரான சுமித் பஜாஜ், டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்று ஜோதிடம் மூலமாக கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியை விடவும் கூடுதல் ஆக்ரோஷத்துடன் இந்திய வீரர்கள் பயமின்றி விளையாடுவார்கள். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்களான டேவிட் மில்லர், டி காக், ஸ்டப்ஸ் மற்றும் ஷம்சி ஆகியோரிடம் இந்திய அணி கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக டேவிட் மில்லர் தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிபெற வைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் அவரால் தோல்வியடையவும் வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஜடேஜா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள். இதனால் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல 75 சதவிகிதம் வரை அதிர்ஷ்டம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி 26 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இருந்தாலும் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டம் மார்க்ரம் இதுவரை ஒரு ஐசிசி போட்டியில் கூட தோல்வியடைந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.