IND vs SA Test : ரிஷப் பண்ட் மட்டும் இருந்திருந்தால்.. தென்னாப்பிரிக்காவை கதிகலங்க வைத்திருப்பார்
செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், இந்திய ரசிகர்கள் பலர் ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து அவர் பெயரை டிரென்டிங் ஆக்கினர். இந்திய அணியின் பேட்டிங் அந்த அளவுக்கு மோசமாக இருந்தது தான் அதற்கு முக்கிய காரணம்.
தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்க்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என கே எல் ராகுல் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இது போன்ற பேட்டிங் ஆர்டர் சரிவின் போதெல்லாம் கை கொடுத்து போட்டியை மாற்றக் கூடியவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். ஆனால், அவர் தற்போது விபத்தில் சிக்கியதில் இருந்து மீண்டு, தன் உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார். இன்னும் போட்டிகளில் பங்கேற்கும் நிலையை அவர் எட்டவில்லை. அதனால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய கே எல் ராகுல் 70 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். அதன் காரணமாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழந்த போதும் 200 ரன்களை கடந்தது. அவரைத் தவிர்த்து அதிகபட்சமாக கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்கள் எடுத்து இருந்தனர்.
இப்படி மோசமான ஆட்டத்தை இந்தியா ஆடிய நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரிஷப் பண்ட் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டர்கள் பவுண்டரி எல்லையில் தான் நின்று இருப்பார்கள். அவர் அதிரடியாக ஆடி மொத்த அழுத்தத்தையும் தென்னாப்பிரிக்க அணிக்கு கொடுத்திருப்பார் என அவரைப் பற்றி புகழ்ந்து பல ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.
ரிஷப் பண்ட் கடந்த முறை தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஒரு சதம் அடித்து இருந்தார். ஆனால், அதைத் தவிர அவர் பெரிதாக ரன் குவிக்கவில்லை. ஆறு இன்னிங்க்ஸ்களில் ஐந்து இன்னிங்க்ஸ்களில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications