IND vs SA: வரலாறு படைத்த ஸ்மிருதி - ஷஃபாலி ஜோடி.. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் புதிய மைல்கல்
நவி மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த நிலையில், தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளது. மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளின் வரலாற்றில், தொடக்க ஜோடியாக அரிய சாதனையை செய்து இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டனர்.
நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இது இந்தியாவிற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், அப்போது களமிறங்கிய ஸ்மிருதி - ஷஃபாலி ஜோடி தென்னாப்பிரிக்காவின் கணக்குகளைத் தவிடுபொடியாக்கியது.

அதிரடியில் ஷஃபாலி, நிதானத்தில் ஸ்மிருதி:
தொடக்கத்திலிருந்தே தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார் இளம் புயல் ஷஃபாலி வர்மா. பெரிய போட்டியின் அழுத்தம் துளியும் இன்றி, தனது இயல்பான, அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டு ரன் ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.
மறுமுனையில், அனுபவ வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலிக்குச் சரியான ஆதரவை அளித்து, நிதானமாகவும், அதே சமயம் தேவையான நேரத்தில் பவுண்டரிகளை அடித்தும் ஒரு சரியான பார்ட்னர்ஷிப்பிற்கு வித்திட்டார். இந்த ஜோடியின் அற்புதமான ஆட்டம், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது.
வரலாற்றுச் சாதனை:
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்து, மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்தது. மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளின் வரலாற்றில், தொடக்க விக்கெட்டுக்குச் 100 ரன்களுக்கும் மேல் சேர்த்த இரண்டாவது ஜோடி என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா பெற்றனர்.
இதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹெய்ன்ஸ் மற்றும் அலிசா ஹீலி ஜோடி 160 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இந்த மைல்கல்லை எட்டிய சிறிது நேரத்திலேயே, க்ளோ ட்ரையான் பந்துவீச்சில் ஸ்மிருதி மந்தனா 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும், அவர் ஆட்டமிழக்கும்போது, இந்திய அணி 17.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஷஃபாலி வர்மா 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தின் காரணமாக, இந்திய அணி 50 ஓவர்களில் 298 ரன்கள் குவித்தது. இறுதியில், 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது.


Click it and Unblock the Notifications