நீதான்யா உண்மையான காதலன்.. ஸ்மிருதி மந்தனா பாய்ஃபிரண்ட் பலாஷ் முச்சலின் புகைப்படத்துக்கு வரவேற்பு
மும்பை: இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த தருணத்தில், அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் காதலரும், இசையமைப்பாளருமான பலாஷ் முச்சல், தனது காதலியின் வெற்றியை பச்சைக்குத்தி இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மகளிர் ஒருநாள் போட்டி இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மகிழ்ச்சி அலைகள் எழுந்தன. மைதானத்திலேயே தனது காதலி ஸ்மிருதியின் வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடிய பலாஷ், போட்டி முடிந்ததும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

அந்தப் புகைப்படத்தில், பலாஷ் உலகக்கோப்பையை கையில் பெருமிதத்துடன் பிடித்திருக்க, அவருக்குப் பின்னால் ஸ்மிருதி மந்தனா ஆனந்தப் புன்னகையுடன் வெற்றிக் களிப்பில் கைகளை உயர்த்தியபடி நின்றார். "அனைவருக்கும் முன்னால் நாங்கள் இருக்கிறோம், இந்தியர்கள்" என்ற தலைப்புடன் பலாஷ் அந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தார்.
இதயங்களை வென்ற 'SM18' டாட்டூ:
பலாஷ் கோப்பையைக் கையில் பிடித்திருந்தபோது, அவரது கையில் இருந்த ஒரு சிறப்பு டாட்டூ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதில், ஸ்மிருதியின் பெயரின் முதல் எழுத்துக்களான 'SM' மற்றும் அவரது ஜெர்சி எண்ணான '18' ஆகியவற்றை இணைத்து 'SM18' என அவர் பச்சை குத்தியிருந்தார். ஸ்மிருதி மீதான தனது அன்பையும், அவரது கிரிக்கெட் பயணத்திற்கான தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த டாட்டூ, இணையத்தில் உள்ளவர்களின் இதயங்களை வென்றது.
ஸ்மிருதியின் வெற்றிக்குப் பின்னால் ஒரு தூணாக நிற்கும் பலாஷின் இந்தச் செயலை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். "தங்கள் பெண்களை ஆண்கள் கொண்டாடுவது தான் சிறந்த தருணம்," என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். "அந்த டாட்டூ, அந்த ஆண்மகன், அந்தக் கோப்பை... அவருக்கு எல்லாம் கிடைத்துவிட்டது," என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். "அந்த டாட்டூ என் இதயத்தைக் கொள்ளையடித்துவிட்டது," எனப் பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஜோடிக்கு வரும் நவம்பர் மாதம், மந்தனாவின் சொந்த ஊரான சாங்லியில் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
கோப்பையை முத்தமிட்ட மந்தனா:
இந்தத் உலகக்கோப்பை தொடரில் ஸ்மிருதி மந்தனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பப் போட்டிகளில் பெரிதாக ரன் குவிக்காத அவர் , பின்னர் ஆஸ்திரேலியா (80), இங்கிலாந்து (88) மற்றும் நியூசிலாந்து (109) ஆகிய அணிகளுக்கு எதிராக மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதிப் போட்டியில், ஷஃபாலி வர்மாவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து, 58 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். அதன் மூலம், இந்தியாவின் பிரம்மாண்ட ஸ்கோருக்கு அடித்தளமிட்டார். ஒன்பது போட்டிகளில் 434 ரன்கள் குவித்து, இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீராங்கனையாக மந்தனா திகழ்ந்தார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய மந்தனா, "இதை எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இன்னும் இந்த வெற்றியை என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு நம்பமுடியாத தருணம். சொந்த மண்ணில் உலகக்கோப்பை, அதுவும் சாம்பியன் பட்டம். கடந்த காலங்களில் பல உலகக்கோப்பைகளில் நாங்கள் இதய வலியுடன் வெளியேறியிருக்கிறோம். ஆனால், இந்த முறை கிடைத்திருக்கும் ஆதரவு அளப்பரியது. கடந்த 40 நாட்களை எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை" என்று உணர்ச்சிப்பெருக்குடன் கூறினார்.


Click it and Unblock the Notifications