Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ரிஷப் பண்ட்டின் கேப்டன்சிதான் கொல்கத்தா தோல்விக்கு காரணம்... கில் இருந்திருந்தால்.." கைஃப் அதிரடி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அடைந்த தோல்விக்கு, கேப்டன் சுப்மன் கில் இல்லாத நிலையில், மாற்று கேப்டனாகச் செயல்பட்ட ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி ஒரு முக்கியக் காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கில்லின் காயம் மற்றும் 124 ரன்கள் சேஸிங்கின்போது இந்திய பேட்ஸ்மேன்கள் காட்டிய தடுமாற்றம் ஆகியவை தோல்விக்கு வழிவகுத்ததாக அவர் கூறியுள்ளார்.

போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது, 'ஸ்லாக் ஸ்வீப்' ஷாட் அடித்தபோது, சுப்மன் கில்லின் கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆன அவர், முன்னெச்சரிக்கை ஸ்கேன்களுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், போட்டியின் பெரும்பகுதிக்கு இந்திய அணி அதன் நிரந்தர கேப்டன் இல்லாமல் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

IND vs SA First test loss is due to Rishabh Pant s captaincy says Mohammed Kaif

சுப்மன் கில் இல்லாத நிலையில், துணை கேப்டன் ரிஷப் பண்ட் அணியை வழிநடத்தினார். சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில், சிறிய வித்தியாசங்கள் கூட ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய சூழலில், பண்ட் விரைவாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளத் திணறினார் என்று கைஃப் கருதுகிறார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், "நாம் அவர்களுக்கு (தென் ஆப்பிரிக்கா) அதிகப்படியான சிங்கிள்ஸ் எடுக்க அனுமதித்தோம். சுழலுக்குச் சாதகமான ஆடுகளத்தில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன் எடுப்பது எளிதா? ஒரு மிட்-ஆன் வைத்து, பாயின்ட் ஃபீல்டரை மேலே கொண்டு வந்து, பேட்ஸ்மேன்களைச் சவாலை ஏற்கச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஃபீல்டர்கள் பின்னால் நிறுத்தப்பட்டிருந்தனர்."

"இதனால் அவர்களின் 70-80% ரன்கள் சிங்கிள்ஸ் மூலமாகவே வந்தன. கில் இல்லாததால், பண்ட் ஒரு 'இன் அண்ட் அவுட்' (சிலர் உள்ளேயும், சிலர் வெளியேயும் இருக்கும்படி) ஃபீல்டிங் வைத்திருந்தார். அதுவும் பாதிப்பை ஏற்படுத்தியது. சூழ்நிலையைப் புரிந்துகொள்ள அவரும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார்" என்று விமர்சித்துள்ளார்.

"சுப்மன் கில் இருந்திருந்தால் கதை வேறு"

இந்தத் தோல்விக்குப் பண்ட்டின் கேப்டன்சி ஒரு காரணம் என்றாலும் சுப்மன் கில் இல்லாதது வியூக ரீதியாகவும், பேட்டிங் ரீதியாகவும் பெரும் இழப்பு என்பதையும் கைஃப் சுட்டிக் காட்டினார். 124 ரன்களைத் துரத்தியபோது, நிதானமும், சரியான ஷாட் தேர்வும் தேவைப்பட்ட ஆடுகளத்தில் இந்திய பேட்டிங் வரிசை சரிந்தது.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவர் மட்டுமே தென் ஆப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஒரு தெளிவான திட்டத்துடன் விளையாடினர். மற்ற வீரர்கள் டைமிங், ஃபுட்வர்க் மற்றும் பொறுமை ஆகியவற்றில் திணறியதால், இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டது.

"சுப்மன் கில் இருந்திருந்தால் ஒரு வித்தியாசம் இருந்திருக்கும். அவரால் இரண்டு இன்னிங்ஸிலும் விளையாட முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் நாம் ஒரு 50, 60 அல்லது 100 ரன்கள் என நல்ல முன்னிலை பெற்றிருந்தால், தென் ஆப்பிரிக்காவை அங்கேயே ஆட்டத்திலிருந்து வெளியேற்றியிருக்கலாம். அதை செய்ய நாம் தவறவிட்டோம்."

"கேப்டனாக சுப்மன் கில் களத்தில் இல்லாததும் ஒரு இழப்பு. இரண்டாவது இன்னிங்ஸ் சேஸிங்கில் அவர் இல்லை. கில் தற்போது நமது சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். இதுபோன்ற ஒரு வீரர், இக்கட்டான சூழ்நிலைகளில் உங்களைக் காப்பாற்ற முடியும்" என்று கைஃப் கூறினார்.

சுப்மன் கில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அணி தங்கியுள்ள ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக அணியுடன் கவுஹாத்திக்குப் பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவரது பங்கேற்பு இன்னும் உறுதியாகவில்லை. தொடரைச் சமன் செய்ய வேண்டுமானால், குவஹாத்தியில் இந்திய அணி சிறந்த முடிவுகளை எடுப்பதுடன், பேட்டிங்கில் அதிகப் பொறுப்புணர்வையும் காட்ட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Tuesday, November 18, 2025, 17:53 [IST]
Other articles published on Nov 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+