இந்தியா, தென்னாப்பிரிக்கா போட்டி நிறுத்தம்.. ஈசல் படையெடுப்பால் ஓடிய வீரர்கள்.. நடுவர்கள் முடிவு
மும்பை : கிரிக்கெட் போட்டிகள் மழையால் நின்று பார்த்திருக்கிறோம். புழுதி புயல் அடித்து போட்டி நிறுத்தப்பட்டு பார்த்திருக்கிறோம். ஆனால் ஈசல் படையெடுப்பால் போட்டி நிறுத்தப்பட்டதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. ஆம் அதுதான் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றிருக்கிறது.
இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதும் மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியும் பெற்று இருப்பதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இதை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் திலக் வர்மா 51 பந்துகளில் சதம் அடித்தார். அபிஷேக் ஷர்மா 24 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா வீரர்கள் களத்திற்கு வந்தனர்.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பே யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று ஈசல் கூட்டமாக வந்து படை எடுத்தது. மைதானத்தில் ஈசல் மேய்வதெல்லாம் பெரிய சிக்கலே கிடையாது. இந்தியாவில் பலமுறை ஈசல்கள் வந்திருக்கிறது. ஆனால் இந்தப் போட்டியில் வீரர்கள் களத்தில் நிற்க முடியாத படி ஈசல்கள் படையெடுத்து வீரர்களை சுற்றி திரிந்தது.
ஒரு கட்டத்தில் பந்தே கண்ணுக்குத் தெரியாத வகையில் ஈசல்கள் சுற்றியது. இதனால் ஒரு ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடுவர்கள் ஈசல் குறையும் வரை போட்டியை நிறுத்த முடிவு எடுத்தனர்.
இதற்கு இரு அணி கேப்டர்களும் ஒப்புக் கொண்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. ஈசல் அதிக வெளிச்சம் இருந்தால் கூடும் என்பதால் மைதானத்தில் மின்விளக்குகள் சிறிது அளவு அடக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனை எடுத்து பல ஈசல்கள் மைதானத்தில் செத்து விழுந்தது. இதனால், அந்த ஈசல்களை அகற்றும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். முதல்முறையாக கிரிக்கெட் வரலாற்றில் ஈசல் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications