கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைத் தவிர்த்து, போட்டியை 'டிரா' செய்யக் கடுமையாகப் போராடி வருகிறது. ஆனால், இது சாத்தியமா? என்ற கேள்விக்கு, இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் போட்ட ஒரு ட்வீட்டே பதிலாக அமைந்துள்ளது. வீரர்களை உற்சாகப்படுத்த அவர் போட்ட ட்வீட், இந்திய அணியின் படுமோசமான நான்காவது இன்னிங்ஸ் ரெக்கார்டை அம்பலப்படுத்தியுள்ளது.
கவுகாத்தி டெஸ்டின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி போட்டியை டிரா செய்ய நாள் முழுவதும், அதாவது 90 ஓவர்கள் (540 பந்துகள்) பேட்டிங் செய்ய வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.

இந்தச் சூழலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தனது 'X' பக்கத்தில், "நம்பிக்கை என்பது எளிதாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. ஆனால் அதுதான் ஒரு சாம்பியனை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. நம் வீரர்கள் நிச்சயம் நம்புவார்கள். இன்று என்ன நடந்தாலும், நமது வீரர்கள் காட்டும் குணத்தைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது," என்று பதிவிட்டு, இங்கிலாந்தில் வாஷிங்டன் சுந்தரும் ஜடேஜாவும் போட்டியை டிரா செய்ததை நினைவு கூர்ந்தார்.
அவர் நல்ல எண்ணத்தில் இந்த ட்வீட்டை போட்டாலும், அதனுடன் பகிர்ந்த ஒரு புள்ளிவிவரப் படம் தான் தற்போது 'ட்ரோல்' செய்யப்பட்டு வருகிறது. அந்தப் படத்தில், தற்போது விளையாடும் இந்திய அணியில் உள்ள வீரர்கள், தங்களது டெஸ்ட் கெரியரில் நான்காவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக எத்தனை பந்துகளைச் சந்தித்துள்ளனர் என்ற விவரம் இருந்தது. அந்தப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால், இந்திய அணி இந்த டெஸ்டை டிரா செய்வது ஏன் சாத்தியமில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஐந்தாம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது. மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் நாள் முழுவதும் ஆட வேண்டும். களத்தில் சாய் சுதர்சன் மற்றும் ஜடேஜா உள்ளனர். இவர்களுக்குப் பிறகு நித்திஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் உள்ளனர்.
அஸ்வின் பகிர்ந்த புள்ளிவிவரத்தின்படி, துவக்க வீரர்கள் தவிர்த்து ஐந்தாம் நாள் ஆடிய மற்றும் ஆட வேண்டிய வீரர்களின் நான்காவது இன்னிங்ஸ் ரெக்கார்டு (சராசரியாக சந்தித்த பந்துகள்) இதுதான்:
இந்த புள்ளிவிவரத்தை கூட்டிப் பார்த்தால், மொத்தமாக 487 பந்துகள் தான் வருகிறது. ஆனால், ஐந்தாம் நாளில் இந்திய அணி டிரா செய்யத் தேவைப்படுவது குறைந்தபட்சம் 540 பந்துகள். இதை உடைக்க வேண்டும் என்றால் பல வீரர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த நான்காம் இன்னிங்ஸ் பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். ஒரே நாளில், சிதைந்துபோன 5-ம் நாள் பிட்ச்சில், அத்தனை பேரும் தங்கள் வாழ்வின் சிறந்த ஆட்டத்தை ஆடுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
களத்தில் சாய் சுதர்சன் ஆமை வேகத்தில் ஆடி வருகிறார் (முதல் இடைவேளையின் போது 138 பந்துகளில் 14 ரன்கள்). டிரா செய்ய இது சரியான அணுகுமுறைதான். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தால் என்ன செய்வது? கேப்டன் ரிஷப் பண்ட் 16 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தனது 'இயற்கையான' ஆட்டத்தை ஆடி ஹார்மர் சுழலில் சிக்கி வெளியேறினார். குல்தீப் யாதவ், துருவ் ஜூரல் ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
அஸ்வின் நம்பிக்கையூட்ட நினைத்தது சரிதான். ஆனால் அவர் காட்டிய புள்ளிவிவரமே, இந்த இந்திய அணியால் நான்காவது இன்னிங்ஸில் தாக்குப்பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. ஒரு அற்புதம் நிகழ்ந்தால் மட்டுமே, இந்தக் கூட்டல் கணக்கைத் தாண்டி, இந்திய அணி இந்த வரலாற்று தோல்வியில் இருந்து தப்பிக்க முடியும்.