மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் அனைத்து வடிவங்களிலான கிரிக்கெட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல். அண்மையில் முடிவடைந்த ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி கேஎல் ராகுல் மொத்தமாக 452 ரன்களை விளாசி தள்ளினார். தொடக்க வீரராக களமிறங்கி விளையாடியதை விடவும் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் கேஎல் ராகுல் தொடர்ந்து மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு, டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பராகவும் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த பேட்டிங் வரிசையில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் உட்பட இனி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கேஎல் ராகுல் 4 அல்லது 5 ஆகிய பேட்டிங் வரிசையிலேயே களமிறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேஎல் ராகுல் ஏற்கனவே இந்திய அணி தேர்வு குழு மட்டுமல்லாமல் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசித்துள்ளதாக தெரிய வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் இதுவரை விக்கெட் கீப்பராகவோ அல்லது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவோ விளையாடியதில்லை. அதேபோல் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காகவும் தொடக்க வீரராகவே களமிறங்கி வந்தார். இந்த நிலையில் லக்னோ அணி தரப்பில் தேவ்தத் படிக்கல் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தொடக்க வீரரான அவரை ஏன் லக்னோ அணி வாங்கியது என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.
இதற்கு கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாட முடிவு செய்ததே காரணமாக தெரிய வந்துள்ளது. இதனால் இனி கேஎல் ராகுலின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும் என்றும், கேஎல் ராகுல் 2.0 வெர்ஷனாக இது அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்காக தீவிர பயிற்சியில் கேஎல் ராகுல் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.