மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு, தற்போது முன்னாள் வீரர்கள் மூலம் சம்மட்டி அடி விழுந்து வருகிறது. குறிப்பாக, சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களை கேட்டு வாங்கி, அதில் இந்திய அணியே மண்ணைக் கவ்வியது குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் , சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று இந்திய நிர்வாகம் கேட்டது. ஆனால், அந்தப் போட்டியில் 124 ரன்களைக்கூட சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி 93 ரன்களில் சுருண்டு தோற்றது.

இதுபற்றி பேசிய ஹர்பஜன் சிங், இந்திய அணி நிர்வாகம் ஆடுகளம் அமைப்பதில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். "நாம் நல்ல கிரிக்கெட் ஆடுகளங்களில் விளையாட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே, முதல் நாளிலிருந்தே பந்து திரும்பும் பிட்ச்களில் ஆடி வருகிறோம். இதனால் இந்திய கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. நாம் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறோம். நல்ல விக்கெட்டுகளில் ஆடும்போது நாம் திணறுகிறோம்.
இப்படி மோசமான பிட்சுகளை அமைத்துவிட்டு, தோல்வியடைந்த பிறகு சாக்குப்போக்கு சொல்வதை விடுத்து, கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்க்க வேண்டும். அதாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்று ஹர்பஜன் சிங் விளாசியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது. இது அதற்கான வழியும் இல்லை. உண்மையிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்ற நினைத்தால், நல்ல ஆடுகளங்களில் விளையாட வேண்டும். அப்போதுதான் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்.
இங்கிலாந்து தொடரில் நாம் நல்ல பிட்ச்களில் விளையாடியதால்தான் சுப்மன் கில் போன்றவர்களால் 700 ரன்களுக்கு மேல் குவிக்க முடிந்தது. ஆனால் இந்தியாவில் பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிக்க வாய்ப்பே தருவதில்லை. பிறகு எப்படி நம்மால் வெற்றி பெற முடியும்? பேட்டிங் திறமை மங்கிப்போக இதுவே காரணம்" என்று ஹர்பஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து தொடரிலும் இதே தவறைச் செய்து 0-3 எனத் தோற்றோம். இப்போது தென்னாப்பிரிக்காவிடமும் 0-2 எனத் தோற்றுள்ளோம். இனியாவது கம்பீர் மற்றும் இந்திய அணி நிர்வாகத்தினர் திருந்துவார்களா என்பதே ஹர்பஜனின் கேள்வியாக உள்ளது.