கட்டாக்: "நான் என்ன நினைக்கிறேன், எனக்கு என்ன வேண்டும் என்பது ஒரு பொருட்டே அல்ல; இந்திய அணிக்கு என்ன தேவை என்பது மட்டுமே முக்கியம்" என்று கட்டாக் டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது, களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 59 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

ஆட்டநாயகன் விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய பாண்டியா, தனது பேட்டிங் உத்தி குறித்து விளக்கினார். "பிட்ச் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தது எனக்குத் தெரியும். அந்த நேரத்தில் கொஞ்சம் தைரியமாக ஆட வேண்டியிருந்தது. பந்தை உடைக்கும் அளவுக்கு ஓங்கி அடிப்பதை விட சரியான டைமிங்கில் அடிப்பதில் கவனம் செலுத்தினேன். நான் பேட்டிங் செய்த விதம் எனக்கே மிகுந்த திருப்தியை அளித்தது" என்றார்.
தனது ஃபிட்னஸ் மற்றும் கம்பேக் குறித்துப் பேசிய அவர், "கடந்த 6-7 மாதங்கள் ஃபிட்னஸ் ரீதியாக எனக்குச் சிறப்பாக அமைந்தது. இதற்காக நான் பட்ட கஷ்டங்களை பெரிதாகச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், கடந்த 50 நாட்கள் எனது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களைப் பிரிந்து, தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) தங்கி, அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்தேன். இன்று இங்கு வந்து விளையாடி, அதற்கான பலன் கிடைக்கும்போது மனநிறைவாக இருக்கிறது" என்று கூறினார்.
அணியில் தனது பணி குறித்துப் பேசிய பாண்டியா, "ஒரு கிரிக்கெட் வீரராக, அணியில் எனக்கு என்ன வேலை என்பது குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன வேண்டும் என்பது முக்கியமல்ல; இந்திய அணிக்கு என்ன தேவை என்பதுதான் முக்கியம்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னால் முடிந்ததைச் செய்வேன். சில நாட்கள் நன்றாக அமையும், சில நாட்கள் அமையாது. ஆனால், எந்த அணிக்காக ஆடினாலும் 'அணி தான் முதல், தேசம் தான் முதல்' என்ற மனநிலையே எனக்கு எப்போதும் உதவியிருக்கிறது. அதுதான் எனது மிகப்பெரிய பலம்" என்று உணர்ச்சிபொங்கக் கூறினார்.
சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜை தாக்கி ஆடியது குறித்துப் பேசிய அவர், "அக்சர் படேலுக்கு அவர் பந்துவீசத் தயங்குவார் என்று எனக்குத் தெரியும். பந்து என் எல்லைக்குள் வந்தால் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது ஒரு கணிக்கப்பட்ட ரிஸ்க். அது சரியாக அமைந்தது. அந்த ஓவர் தான் எங்களுக்குத் தேவையான ரன்களை கொடுத்தது. எதிர்பார்த்ததை விட 20-25 ரன்கள் கூடுதலாகக் கிடைக்க அதுவே காரணம்" என்று விளக்கினார்.