அகமதாபாத்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியின் முடிவில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஹர்திக் பாண்டியா சூசகமாக பதிலடி கொடுத்தார். அகமதாபாத் மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்து 63 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
"நான் களத்திற்கு போகும்போதே முதல் பந்தில் சிக்ஸர் அடிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டுத் தான் போனேன்" என போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேசியது இப்போது வேகமாக பரவி வருகிறது.

இந்தத் தொடரின் 2வது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 28 பந்துகளை சந்தித்து வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். போட்டி முடிந்த பிறகு, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது பாண்டியாவின் மெதுவான ஆட்டத்தை கம்பீர் கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்பட்டது.
அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் அமைந்தது. ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு பேசிய ஹர்திக், "இன்று நான் ஒரு முடிவோடு தான் களமிறங்கினேன். நான் உள்ளே செல்லும்போதே என் பார்ட்னரிடம் (திலக் வர்மா), 'நான் முதல் பந்திலேயே இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கப் போகிறேன்' என்று கூறினேன்.
எனக்கு நம்பிக்கை இருந்தது. அது ரிஸ்க் தான், ஆனால் அது எனக்கு கை கொடுத்தது. அணியின் வெற்றிக்கு உதவுவது தான் முக்கியம். எத்தனை சறுக்கல்கள் வந்தாலும், அதைத் தாண்டி வலுவாக மீண்டு வரவேண்டும் என்பது தான் என் நோக்கம்" என்று கூறினார் பாண்டியா .
வெறும் 16 பந்துகளில் அரைசதம் அடித்தது குறித்துப் பேசிய அவர், "உண்மையாகவே நான் அவுட்டாகி வெளியே வரும் வரை அது 2வது அதிவேக அரைசதம் என்று எனக்குத் தெரியாது. சோஷியல் மீடியா டீம் தான் சொன்னார்கள். 'அடடா! முதலிடத்தை மிஸ் பண்ணிட்டோமே' என்று தோன்றியது. இருந்தாலும் யுவி பாஜி (யுவராஜ் சிங்) அந்த சாதனையை வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்" என்றார்.
இந்தப் போட்டியில் இந்தியா குவித்த 231 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா, குவின்டன் டி காக் 65 ரன் சேர்த்து அதிரடியால் மிரட்டினாலும், வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ராவின் பந்துவீச்சால் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா. இதன் மூலம் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.