IND vs SA: 2வது ஓவரிலேயே உறைந்து போன தென்னாப்பிரிக்கா.. ராணா எக்ஸ்பிரஸ்.. 11 ரன்னுக்கு 3 விக்கெட்
ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 350 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, போட்டியின் ஆரம்பத்திலேயே இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் சிக்கி சின்னாபின்னமானது. குறிப்பாக ஹர்ஷித் ராணா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை நிலைகுலையச் செய்தார்.
இந்திய அணி நிர்ணயித்த 349 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு, இரண்டாவது ஓவரிலேயே மரண அடி விழுந்தது.
ஒரே ஓவரில் 2 டக்-அவுட்
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா வீசிய 2-வது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரியான் ரிக்கல்டன் தான் சந்தித்த முதல் பந்திலேயே போல்ட் ஆகி 'கோல்டன் டக்' முறையில் வெளியேறினார்.

அடுத்து வந்த நட்சத்திர வீரர் குயின்டன் டி காக், அந்த ஓவரின் 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து 'டக் அவுட்' ஆனார். ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் டக் அவுட் ஆனதால், தென்னாப்பிரிக்கா 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அந்த அதிர்ச்சியில் இருந்து தென்னாப்பிரிக்கா மீள்வதற்குள், 5-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் தனது வேலையைக் காட்டினார். தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், அர்ஷ்தீப் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனால் 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன்பின் மேத்யூ பிரீட்ஸ்கே மற்றும் டோனி டி சோர்ஸி ஜோடி அணியை மீட்கப் போராடியது. 11 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து இருந்தது. டி சோர்ஸி 25 ரன்களுடனும், பிரீட்ஸ்கே 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


Click it and Unblock the Notifications