Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 WC: செமி பைனல்.. இந்தியா 2 போட்டிகளில் வென்றாலும் போதாது.. அரையிறுதிக்குச் செல்வதில் சிக்கல்

அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த ஒரு தோல்வி, இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த போட்டியில் அடைந்த தோல்வியால் இந்தியாவின் நெட் ரன் ரேட் சரிந்துள்ளது. இதனால் இனி வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குச் செல்வது உறுதியில்லாத ஒரு நிலை உருவாகியுள்ளது.

குழு 1 புள்ளிப்பட்டியல் நிலவரம்

சூப்பர் 8 சுற்றுக்கு மொத்தம் எட்டு அணிகள் தகுதி பெற்று இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு 1-ல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் 2 புள்ளிகளுடன் +3.8 என்ற சிறந்த நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி புள்ளி ஏதுமின்றி -3.8 என்ற நெட் ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவித்து வருகிறது.

IND vs SA How India Can Qualify for T20 World Cup 2026 Semifinals Net Run Rate Scenarios

அரையிறுதிக்குத் தகுதி பெறுமா இந்தியா?

இந்திய அணி அரையிறுக்குச் செல்ல முடியுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதற்கான வாய்ப்புகள் இன்னும் முழுமையாக முடிந்துவிடவில்லை. ஆனால், இனி வரும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். வெறும் வெற்றி மட்டும் போதாது, பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது நெட் ரன் ரேட்டை கணிசமாக உயர்த்த வேண்டும்.

ஒருவேளை ஜிம்பாப்வே அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திவிட்டால் நிலைமை மேலும் சிக்கலாகும். அப்படி நடந்தால், குழுவில் உள்ள மூன்று அணிகள் தலா 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெறும் நிலை உருவாகும். இந்தச் சூழலில் புள்ளிகள் சமமாக இருப்பதால், நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்குத் தகுதி பெறும். இதனால்தான் இரண்டு போட்டிகளில் வென்றாலும் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியில்லை என்று கூறப்படுகிறது.

ஐசிசி விதிமுறைகள் என்ன சொல்கிறது?

சூப்பர் 8 சுற்றில் அணிகள் சமமான புள்ளிகளைப் பெறும் பட்சத்தில், அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

அதிக வெற்றிகள்: குழுவில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி தரவரிசையில் முன்னிலை பெறும்.

நெட் ரன் ரேட்: ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் சமமான புள்ளிகள் மற்றும் சமமான வெற்றிகளைக் கொண்டிருந்தால், சூப்பர் 8 சுற்றில் சிறந்த நெட் ரன் ரேட் வைத்துள்ள அணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நேருக்கு நேர் மோதல்: வெற்றிகள் மற்றும் நெட் ரன் ரேட் ஆகிய இரண்டும் சமநிலையில் இருந்தால், அந்த இரு அணிகளும் தங்களுக்குள் நேருக்கு நேர் மோதிய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றதோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

ஐசிசி தரவரிசை: மேற்கண்ட அனைத்து விதிகளும் பலனளிக்காத மிக அரிதான சூழல் ஏற்பட்டாலோ அல்லது குழுவில் உள்ள போட்டிகள் மழையால் முடிவின்றிப் போனாலோ, 2026 பிப்ரவரி 6-ம் தேதி நிலவரப்படி ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் எந்த அணி முன்னிலையில் உள்ளதோ அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

எனவே, இந்திய அணி எவ்வித சிக்கலும் இன்றி அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமென்றால், அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதே ஒரே வழியாகும்.

இந்தியா இடம் பெற்றுள்ள பிரிவில் இன்னும் ஐந்து போட்டிகள் மீதமுள்ளன. இதில் ஜிம்பாப்வே அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் ஒன்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி விட்டால் இந்தியாவுக்கு அதிக நெட் ரன் ரேட் வைத்திருக்க வேண்டிய சிக்கல் எழும். ஒருவேளை இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் தொடரில் இருந்தே வெளியேற நேரிடும்.

Story first published: Monday, February 23, 2026, 13:21 [IST]
Other articles published on Feb 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+