அகமதாபாத்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தொடர்ந்து 13 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்த நிலையில் அந்த வெற்றிப் பயணத்தை தற்போது தென்னாப்பிரிக்கா தடுத்து நிறுத்தி இருக்கிறது.
இந்திய அணி சொந்த மண்ணில் எப்படி தோல்வியை தழுவியது? இதற்கு முன்னால் வரை அபாரமாக விளையாடி வந்த இந்தியா எப்படி தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது என்று பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் என்ற தலைகனம் தான் காரணம். ஆனால் தென்னாபிரிக்க அணி வெற்றியை பெறுவதற்காக யுக்திகளை அமைத்து, அதனை களத்தில் சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.
ஆனால் டி20 உலக கோப்பையில் பல ஆட்டங்கள் இங்கு நடந்திருப்பதால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் தான் இந்த போட்டிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆடுகளத்தின் தன்மை தோய்வாக மாறும் என்பதை புரிந்து கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்கள், டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யாமல் பனி பொழிந்தாலும் பரவாயில்லை. நாங்கள் முதலில் பேட்டிங்கை செய்து கொள்கிறோம் என்ற முடிவில் இருந்தார்கள்.
அது மட்டுமில்லாமல் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அனைவரும் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்தை வீசும் திறமை கொண்டவர்கள். நாங்கள் வேகத்தை பயன்படுத்த போகிறோம் என்பது போல் பயிற்சியை செய்துவிட்டு, போட்டியின் போது ஆடுகளத்தை பார்த்த தென்னாப்பிரிக்கா வீரர்கள் தங்களது பந்தின் வேகத்தை குறைத்து மாற்றி வீசினார்கள்.
பந்தின் வேகம் குறைந்ததால் அது ஆடுகளத்தில் பட்டு பேட்டிற்கு மிகவும் தோய்வாக வந்தது. இதனை அடிக்க முற்பட்ட இந்திய வீரர்கள் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தனர். இந்திய அணி வீரர்களை ஏமாற்றும் விதமாக நக்கில் பால் என்ற வகைகளை தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக அளவு பயன்படுத்தினர். இதனால் இந்த பந்து வகைகளை அடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.
அது மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் எங்கு ரன்கள் குவிப்பார்கள் என்ற தரவுகளை ஆராய்ந்து, அதற்கு ஏற்ற வகையில் பந்தை வீசினார்கள். மேலும் இந்திய வீரர்கள் அடிக்கும் இடத்தில் எல்லாம் சரியாக பில்டர்களை நிறுத்தி கடும் நெருக்கடியை எய்டன் மார்க்கரம் ஏற்படுத்தினார்.அதுமட்டுமில்லாமல் இந்திய அணியின் வெற்றியே அவர்களது தொடக்க ஜோடியை நம்பி தான் இருக்கின்றது.
அவர்களை கட்டுப்படுத்தினாலே போட்டியில் பாதியில் வென்று விடலாம் என்று நினைத்த மார்க்கரம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். இன்னும் சொல்லப்போனால் தானே முதல் ஓவரை வீசினார். ஸ்டெம்புக்கு நேராக குறி வைத்து பந்துகளை வீச முதல் ஓவரிலே நிதானத்தை இழந்த இசான் கிசன் தூக்கி அடித்து கேட்ச் ஆனார். இதில் இந்தியாவின் வெற்றி பாதித்தது.இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் யுக்திகளை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.