விசாகப்பட்டினம்: 2025 மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியைச் சந்திக்கவில்லை. ஆனால், இதுவரை ஆடிய இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில், இந்திய அணி வெற்றிக்காகக் போராட வேண்டியிருந்தது. இந்தச் சூழலில், இந்திய அணியின் உண்மையான அக்னிப் பரீட்சை இன்றுதான் தொடங்குகிறது. இன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி.
இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி அக்டோபர் 9, வியாழக்கிழமை, மதியம் 03:00 மணிக்கு போட்டி துவங்கும்.
2022 உலகக் கோப்பையில் இந்தியாவை லீக் சுற்றுடன் வெளியேறக் காரணமாக இருந்த தென்னாப்பிரிக்க அணியை இன்று இந்தியா அணி பழிதீர்க்குமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதே சமயம் இந்திய அணியின் பலவீனங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன.

டாப்-ஆர்டர் தடுமாற்றம்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப்-3 பேட்டிங் வரிசை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற பலவீனமான அணிகளுக்கு எதிராகவே தடுமாறியது.
அதிக டாட் பால்கள்: ரன் குவிக்க வேண்டிய ஓவர்களில், அதிக டாட் பால்களை விடுவது மிடில்-ஆர்டருக்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இடது கை சுழலுக்கு எதிராகத் திணறல்: இந்திய பேட்ஸ்மேன்கள் இடது கை சுழற்பந்து வீச்சுக்கு எதிராகத் திணறுவது தொடர்ந்து வருகிறது.
இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் இதுபற்றி பேசுகையில், "எங்களின் முழுமையான சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை என்பதே எதிரணிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தும். அப்படியிருந்தும் நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்" என்றார். ஆனால், தென்னாப்பிரிக்கா போன்ற பலமான அணிகளுக்கு எதிராக இந்த பலவீனங்கள் பெரும் பின்னடைவாக மாறக்கூடும்.
மறுபுறம், தென்னாப்பிரிக்க அணிக்கு இந்தத் தொடர் ஒரு ஓய்வில்லாத பயணமாக அமைந்துள்ளது. ஒரு வாரத்திற்குள் அவர்கள் விளையாடும் மூன்றாவது போட்டி இது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் இரு அணிகளும் இதுவரை 33 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல் வென்றுள்ளது (தென்னாப்பிரிக்கா 12, ஒரு போட்டி முடிவு இல்லை).
உலகக் கோப்பை வரலாற்றில் 3-2 என இந்தியாவே முன்னிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த விவரங்களை நம்பி இந்திய அணி ஏமாந்துவிட முடியாது. கடந்த இரண்டு உலகக் கோப்பை லீக் சுற்றுகளிலும், தென்னாப்பிரிக்கா இந்தியாவிற்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, அவர்களை ஒருபோதும் சாதாரணமாக எடைபோட முடியாது.
விசாகப்பட்டினத்தில் போட்டி தொடங்கும் நேரத்தில் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. இதனால், போட்டி தாமதமாகத் தொடங்க வாய்ப்புள்ளது.
இந்திய அணி நிலவரம்:
அமன்ஜோத் கவுர் காய்ச்சலில் இருந்து மீண்டுவிட்டதால், பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் நோக்கில், ஒரு வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாக அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உத்தேச XI: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், தீப்தி சர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர்/கிராந்தி கௌட்
தென்னாப்பிரிக்க அணி நிலவரம்:
வெற்றி பெற்ற அணியை மாற்றத் தென்னாப்பிரிக்கா விரும்பாமல் இருக்கலாம். ஆனால், பேட்டிங்கை மேலும் வலுப்படுத்த நினைத்தால், ஆல்-ரவுண்டர் அன்னெரி டெர்க்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
தென்னாப்பிரிக்கா உத்தேச XI: லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், மரிசான் கேப், அன்னெகே போஷ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), க்ளோ ட்ரையான், நடின் டி க்ளெர்க், அன்னெரி டெர்க்சன்/மசபாடா கிளாஸ், அயபோங்கா காகா, நான்குலுலேகோ மிலாபா.