துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தான் மோதப் போகின்றன என்ற விஷயம் அரையிறுதி சுற்றுக்கு முன்பே வெளியாகிவிட்டதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 முதல் நடைபெற்று வருகிறது. மார்ச் 2 அன்று குரூப் சுற்றுப் போட்டியின் கடைசி போட்டி நடைபெற்றது.
அதில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. அந்தப் போட்டிக்கு பின் நேரலை ஒளிபரப்பின் போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதாக காட்டப்பட்டது.

அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்றும், தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதும் என்றும் குறிப்பிட்டு இருந்ததோடு, அதில் இந்தியா முதல் அரையிறுதியில் வெற்றி பெறும் எனவும், இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று அந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும் எனவும் அந்த நேரலை ஒளிபரப்பின் போது காட்டப்பட்டிருந்தது. அதை புகைப்படமாக எடுத்து சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதன் மூலம் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது முன்பே தொடரை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு கூறப்பட்டு விட்டதா? இவை அனைத்தும் முன்பே முடிவு செய்யப்பட்டு நடத்தப்படுகிறதா என்ற கேள்விகளும் விவாதங்களும் நடந்து வருகின்றன. சிலர், அந்த ஒளிபரப்பாளர்கள் உத்தேசமாக இப்படி நடக்கும் என கணித்து அதை தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக உருவாக்கி வைத்து இருக்கலாம் என குறிப்பிடுகின்றனர்.
பொதுவாக நேரலை ஒளிபரப்பில் பல்வேறு கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை செய்ய வேண்டும் என்பதால், முன்கூட்டியே நான்கு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதைப் போல காட்சிகளை தயாரித்து வைத்திருப்பார்கள். தவறுதலாக அதில் ஒன்றை வெளியிட்டு விட்டார்கள் என சிலர் விளக்கம் அளிக்கின்றனர்.
ஆனால், அதில் கூறப்பட்டிருந்தது போல முதல் அரையிறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதை அடுத்து மீண்டும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இவை அனைத்தும் ஸ்கிரிப்ட் எனவும், முன்பே எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என முடிவு செய்யப்பட்டு விட்டன எனவும் கூறி வருகின்றனர்.
ஆனால், இது இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மாறாக பாகிஸ்தானில் ஒரு தொலைக்காட்சியில் இவ்வாறு ஒளிபரப்பு செய்யப்பட்டு இருப்பதாக சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.