விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அவருக்கு அணியில் என்ன வேலை என்பது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் கடந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பினார். ராஞ்சியில் 18 பந்துகளில் 13 ரன்களும், ராய்ப்பூரில் 7 பந்துகளில் வெறும் 1 ரன்னும் மட்டுமே எடுத்தார். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக ஆட வேண்டிய இடத்தில் அவர் திணறுவது அணியின் ஸ்கோரை பாதிக்கிறது.

இதுகுறித்து பேசிய பயிற்சியாளர், "வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கைப் பொறுத்தவரை இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறார். கடைசி சில ஓவர்களில் களமிறங்கி அடிப்பது என்பது இப்போது மிகவும் தனித்துவமான ஒரு வேலையாக மாறிவிட்டது. அதில் முன்னேற அவர் சில விஷயங்களில் உழைக்க வேண்டியுள்ளது" என்றார்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று நடந்த வலைப்பயிற்சியில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பேட்டிங் கோச் சிதன்ஷு கோடக் ஆகியோர் முன்னிலையில், சுந்தர் நீண்ட நேரம் பந்தை தூக்கி அடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்.
2025-ம் ஆண்டில் வெறும் 5 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள சுந்தர், ஒரே ஒரு முறை மட்டுமே முழுமையான 10 ஓவர்களை வீசியுள்ளார். அவரை ஏன் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்ற கேள்விக்கு பயிற்சியாளர் பதிலளித்தார்.
"அவர் ஒரு ஃபிங்கர் ஸ்பின்னர். எதிரணியில் இடது கை பேட்ஸ்மேனா, வலது கை பேட்ஸ்மேனா என்பதைப் பொறுத்தே அவருக்கு ஓவர் வழங்கப்படும். அடிப்படையில் அவர் அணியின் 6-வது பந்துவீச்சாளர் தான்.
குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் முதன்மை ஸ்பின்னர்களாக இருக்கும்போது, ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து மொத்தமாகவே 20 ஓவர்களுக்கு மேல் ஸ்பின் வீச முடியாது. அதனால்தான் சுந்தருக்குக் குறைவான ஓவர்கள் கிடைக்கின்றன." என்று விளக்கினார்.
சுந்தர் ஃபார்மில் இல்லாவிட்டாலும், அது அவரை மனரீதியாகப் பாதிக்காது என்று பயிற்சியாளர் கூறினார். "கடந்த 12-16 மாதங்களாக அவர் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இந்த இரண்டு போட்டிகள் அவரது தன்னம்பிக்கையைக் குறைக்காது," என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் வாழ்வா? சாவா? ஆட்டத்தில் சுந்தர் தனது திறமையை நிரூபிப்பாரா அல்லது அவருக்குப் பதில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்குவாரா என்ற சந்தேகமும் உள்ளது.