IND vs SA: இந்திய அணி வெற்றி பெற்றதால் தப்பித்த கம்பீர்.. இந்த 2 மெகா தவறை யாரும் கண்டுக்கவில்லை?
ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், சில தவறுகளை செய்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக 350 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் ஒரு அணி 11 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது என்றால் அந்த அணி குறைந்தபட்சம் 200 ரன்கள் எடுக்கவே சிரமப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் இங்கு தென்னாபிரிக்க அணி வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி பலமானதாக இல்லை என்பது தான் முதல் காரணம். பிரசித் கிருஷ்ணா, ஆர்ஸ்தீப், ஹர்சித் ராணா ஆகிய மூன்று வீரர்களுமே அனுபவம் குறைந்தவர்கள். இதில் அவர்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை.
குறிப்பாக டெத் பவுலிங்கில் ஆர்ஸ்தீப் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். இந்த தருணத்தில் தான் ஷமி போன்ற ஒரு அனுபவம் நிறைந்த வேகப்பந்துவீச்சாளர் அணியில் தேவை. ஆனால் இந்திய அணி நிர்வாகம் சமியை கண்டு கொள்ளவே இல்லை. இதுபோன்று தற்போது இருக்கும் இந்திய அணியில் இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.
கூடுதலாக ஒரு ஆதரவுக்கு கூட அணியில் யாரும் இல்லை. இதன் காரணமாக ஏதேனும் ஒரு வீரர் காயமடைந்தால் மாற்று வேகப்பந்துவீச்சாளர் இல்லை என்ற நிலையில் தான் இந்திய அணி உள்ளது. இதேபோன்று வாஷிங்டன் சுந்தருக்கு வெறும் மூன்று ஓவர்கள் தான் வழங்கப்பட்டு இருக்கிறது.
குறைந்தபட்சம் அவர் ஐந்து அல்லது ஆறு ஓவராவது வீசியிருக்க வேண்டும். அதிலும் இந்திய அணி நிர்வாகம் தவறு செய்து விட்டது.அப்படி இல்லை என்றால், இதற்கு ரிஷப் பண்டையாவது அணியில் சேர்த்திருக்கலாம். இதுபோன்று பேட்டிங்கில் இந்தியா ஒரு மெகாத்தவறை செய்திருக்கிறது. குறிப்பாக பேட்டிங் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் ஐந்தாவது வீரராக களம் இறக்கியது தவறு. இதனால் ராகுல் ஆறாவது வீரராக களமிறங்கினார்.
ராகுல் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர் அதிக பந்துகளை எதிர் கொள்வதை உறுதி செய்திருக்க வேண்டும். இதனால் ராகுல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி இருந்தால், இன்னும் அது அணியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இதுபோன்று வாஷிங்டன் சுந்தரை குறைந்த பந்துகள் இருக்கும்போதுதான் களத்திற்கு அனுப்ப வேண்டும். இதனால் இறுதியில் அவர் சில ரன்களை அடிப்பதும் அணிக்கு பலமாக மாறும். வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவு கம்பீர் எடுத்து இருக்கிறார் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஆனால் இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்பதால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடாது. இதனால் பேட்டிங் வரிசையில் இந்திய அணி இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது. ஆனால் கம்பீர் இதே தவறை தான் மீண்டும் செய்வார் என்பதை தற்போதை நாம் உறுதியாக சொல்லிவிடலாம்.


Click it and Unblock the Notifications