
டாஸ் வெற்றி
இந்த நிலையில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியாவுக்கு டாஸ் வெற்றி பெரிய அளவில் உதவியது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

601 ரன்கள்
ரோஹித் சர்மா 14, தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அரைசதம், சதம் என ரன் அடித்து மிரட்டினர். மயங்க் அகர்வால் 108, புஜாரா 58, ரஹானே 59, ஜடேஜா 91, கோலி 254* ரன்கள் குவித்தனர். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

சதம், இரட்டை சதம்
மயங்க் அகர்வால் அடித்த சதம் அவரது இரண்டாவது சதம் ஆகும். முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த அவர், இந்த முறை 108 ரன்கள் குவித்தார். கோலி முதல் போட்டியில் பெரிய அளவில் ரன் குவிக்காத நிலையில், இந்த முறை இரட்டை சதம் அடித்தார்.

ரபாடா பந்துவீச்சு
தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா மட்டுமே 3 விக்கெட்கள் வீழ்த்தினார். மகாராஜ், முத்துசாமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதில் மகாராஜ் 50 ஓவர்கள் பந்து வீசி 196 ரன்கள் கொடுத்து இருந்தார்.

விக்கெட் இழப்பு
அடுத்து தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் இறுதியில் சில ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட களமிறங்கியது. இரண்டாம் நாள் முடிவதற்குள் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது அந்த அணி.

தென்னாப்பிரிக்கா போராட்டம்
அடுத்து மூன்றாம் நாளிலும் அந்த அணி தடுமாறியது. பாப் டு ப்ளேசிஸ் 64, டி காக் 31 ரன்கள் எடுத்து அணியை கரை சேர்க்க போராடினர். எனினும், அந்த அணி 162 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. அப்போது ஜோடி சேர்ந்த பிலாண்டர் - கேஷவ் மகாராஜ் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்து மிரட்டியது.

275 ரன்கள்
மகாராஜ் 72, பிலாண்டர் 44 ரன்கள் சேர்க்க, மூன்றாம் நாளின் முடிவில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 275 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து இருந்தது. இந்திய அணியில் உமேஷ் 3, ஜடேஜா 1, ஷமி 2, அஸ்வின் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

பாலோ ஆன்
இந்தியா 326 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், நான்காம் நாள் துவக்கத்தில் இந்தியா பாலோ ஆன் கொடுத்தது. தென்னாப்பிரிக்கா மீண்டு வருமா? அல்லது இன்னிங்க்ஸ் தோல்வி அடையுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சொதப்பல்
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் இன்னிங்க்ஸிலும் வரிசையாக விக்கெட்களை இழந்தது. எல்கர் 48, பவுமா 38, பிலாண்டர் 37 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையில், தென்னாப்பிரிக்கா 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. உமேஷ் 3, அஸ்வின் 2, ஜடேஜா 3, இஷாந்த் 1, ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர்.

இமாலய வெற்றி
இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மேலும் 2 - 0 என தொடரையும் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. இந்திய அணி தொடர்ந்து தன் 11வது டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications