ஜோஹன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களை குவித்தது. இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா 47 பந்துகளில் 10 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 120 ரன்களும், சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 9 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 109 ரன்களும் குவித்தனர்.

2வது விக்கெட்டுக்கு இணைந்த சஞ்சு சாம்சன் - திலக் வர்மா இருவரும் 86 பந்துகளில் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனைத் தொடர்ந்து 284 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஹென்ரிக்ஸ் - ரிக்கல்டன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசினார்.
இந்த ஓவரின் 3வது பந்திலேயே ஹென்ரிக்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் ரிக்கல்டன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது ஸ்டப்ஸ் - மார்க்ரம் கூட்டணி இணைந்தது. பின்னர் மீண்டும் 3வது ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் வந்தார்.
அந்த ஓவரின் 5வது பந்தில் மார்க்ரம் 8 ரன்களில் ஆட்டமிழந்த, அடுத்த பந்திலேயே கிளாசன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 3 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்கா அணி 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதனை பார்த்த தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வெளி வர முடியாமல் அமைதியாகினர்.
பின்னர் ஸ்டப்ஸ் - மில்லர் கூட்டணி இணைந்து 5வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் மில்லர் 36 ரன்களிலும், ஸ்டப்ஸ் 43 ரன்களிலும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த யான்சன் மட்டும் அதிரடியாக சிக்ஸ், பவுண்டரிகளை விளாச, தென்னாப்பிரிக்கா அணி 131 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. இறுதியாக 18.2 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதன் மூலமாக இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலமாக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் விளையாடிய 3 டி20 தொடர்களில் ஒன்றில் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.