தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதோடு, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய சதம் விளாசிய சஞ்சு சாம்சன் 108 ரன்களும், திலக் வர்மா 52 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் விளாசினர்.

இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஹென்ரிக்ஸ் - டி ஸோர்சி கூட்டணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 59 ரன்கள் சேர்த்த நிலையில், அர்ஷ்தீப் சிங் வேகத்தில் ஹென்ரிக்ஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த வான் டர் டூசன் அக்சர் படேல் பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். இதன்பின் மார்க்ரன் - ஸோர்சி கூட்டணி அமைத்து விரைவாக ரன்கள் சேர்த்தது.
இவர்கள் பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிய நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பந்தில் மார்க்ரன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் நின்றிருந்த டி ஸோர்சி அதிரடியாக பவுண்டரிகளை விளாச தொடங்கினார். இதனால் திடீரென கேஎல் ராகுல் அர்ஷ்தீப் சிங் அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய 30வது ஓவரில் டி ஸோர்சி 81 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
தொடர்ந்து கிளாஸன் - டேவில் மில்லர் ஆகிய இரு அபாயகரமான வீரர்களும் களத்தில் இருந்தனர். அப்போது அட்டாக்கில் வந்த ஆவேஷ் கான் வீசிய லெக் கட்டரை கணிக்காமல் கிளாஸன் ஆடிய ஷாட் கொஞ்சம் எதிர்பாராத அளவிற்கு மேல் எழுந்த போது, சாய் சுதர்சன் அபாரமான டைவ் அடித்து கேட்ச் பிடித்து ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பினார். இதன்பின் வந்த முல்டர் 1 ரன்னிலும், டேவில் மில்லர் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா அணி 192 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
பின்னர் வந்த கேசவ் மகாராஜ் 14 ரன்களிலும், லிசார்ட் வில்லியம்ஸ் 2 ரன்களிலும், பியூரன் ஹென்ரிக்ஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 45.5 ஓவர்களில் 218 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் மற்றும் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.