சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணியின் ரபாடா மற்றும் இங்கிடியை எதிர்கொள்ள விராட் கோலி 18 யார்ட்-கள் கொண்ட பிட்சில் பயிற்சி மேற்கொண்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி சென்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடக்கவுள்ளது. முதல் போட்டியிலேயே வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய ஏ அணியுடன் இந்திய அணி 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.

அந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக அவசர வேலை காரணமாக லண்டன் பறந்தார். இதன்பின் நேற்று முன்தினம் இந்திய அணியுடன் மீண்டும் இணைந்துகொண்ட விராட் கோலி, உடனடியாக பயிற்சியை தொடங்கினார். சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வெளிநாட்டு வீரர் விராட் கோலி தான்.
இதனால் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் விராட் கோலியை நம்பியே இந்திய அணி களமிறங்குகிறது. ஏனென்றால் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 3 வீரர்களும் தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளனர். அதேபோல் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால் சீனியர் வீரர்கள் இல்லாமல் விராட் கோலி எப்படி விளையாட போகிறார், ஜூனியர் வீரர்களுக்கு வழிகாட்டி அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பும் விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் பவுலிங் பலமாக காணப்பட்டாலும், பேட்டிங்கில் விராட் கோலி மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களில் அதிகளவில் வேகம் மற்றும் பவுன்ஸ் பார்க்க முடியும். அதற்கேற்ப விராட் கோலி தென்னாப்பிரிக்காவின் ரபாடா மற்றும் இங்கிடியின் வேகத்தை எதிர்கொண்டு விளையாட, பயிற்சியின் போது 18 யார்ட்-கள் கொண்ட பிட்சில் பேட்டிங் செய்து பயிற்சி பெற்றுள்ளார். இதன் மூலம் பவுலர்களின் வேகம் மற்றும் பவுன்ஸை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
இந்திய அணியின் விராட் கோலி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு என்று பிரத்யேகமாக ஸ்டாண்ட்ஸை மாற்றி ஆடி வரும் பழக்கம் கொண்டவர். அந்தந்த சூழல்கள் மற்றும் ஆடுகளங்களுக்கு ஏற்ப ஸ்டாண்ட்ஸை மாற்றி பவுலர்களையும் குழப்பி, லைன் மற்றும் லெந்தை மாற்ற வைக்க கூடிய பேட்ஸ்மேன் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.