இந்திய வீரர்களையும் விட்டு வைக்காத மழை.. வந்து இறங்கியதுமே வேலையை காட்டிய தென்னாப்பிரிக்கா
டர்பன் : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் டி20 போட்டி வரும் பத்தாம் தேதி தொடங்குகிறது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருக்கிறார்கள். இதற்காக இந்திய அணி வீரர்கள் முதலில் டர்பன் வந்து அடைந்தார்கள். அப்போது விமான நிலையத்தில் வீரர்களின் உடைமைகளை எடுத்துச் செல்ல எந்த ஆட்களும் வரவில்லை.

எனினும் இது குறித்து இந்திய வீரர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் வீரர்கள் டர்பனில் வந்து இறங்கியதும் மழைக் கொட்டி தீர்த்தது. அப்போது மழையில் இருந்து வீரர்களை பாதுகாக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு குடையை வைத்துக்கொண்டு எந்த ஒரு நிர்வாகியும் விமான நிலையத்தில் இந்திய வீரர்களை வந்து அழைத்துச் செல்லவில்லை.
இதனை அடுத்து மழையில் நனைவதை தடுக்க தங்களுடைய லக்கேஜ்களை வீரர்கள் தலை மேல் வைத்துக்கொண்டு பேருந்தை நோக்கி ஓடினார்கள். இது இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஒரு முறையான ஏற்பாட்டை கூட தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் செய்யவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்திய அணி வந்து தென்னாபிரிக்காவில் விளையாடினால் மட்டுமே தென்னாபிரிக்க அணிக்கு லாபம் என்றும் ஆனால் போதிய ஏற்பாட்டை கூட தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் செய்யவில்லை என்று இந்திய ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனினும் டர்பனில் ஹோட்டலுக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வீரர்களுக்கு இந்திய முறைப்படி ஹோட்டல் ஊழியர்கள் வரவேற்பை கொடுத்தார்கள். முதல் டி20 போட்டி வரும் பத்தாம் தேதி நடைபெறுகிறது. இந்த டி20 தொடர் 14ஆம் தேதி முடிவடைகிறது. 17-ஆம் தேதி ஒரு நாள் தொடர் தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. இரண்டாம் டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுனில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications