மும்பை: தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான பயிற்சியை இந்திய அணியின் கேஎல் ராகுல் தற்போதே தொடங்கியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக 3 அணிகள் பிசிசிஐ தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பயிற்சி போட்டிக்காக சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் பலரும் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படவுள்ளனர். மொத்தமாக 45க்கும் அதிகமான வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் மொத்தமாக தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அதேபோல் 3 அணிகளுக்கும் 3 கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா, டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஒருநாள் அணிக்கு கேஎல் ராகுல் என்று மூன்று பேரும் கேப்டன்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட்டில் இதுபோல் இப்படி நடந்ததே இல்லை. பெரும்பாலும் 3 ஃபார்மெட்களுக்கும் ஒரே கேப்டன் தான் இருப்பார்கள். அண்மையில் கூட விராட் கோலி டி20 கேப்டன்சியை மட்டும் துறந்த போது, ஒருநாள் கேப்டன்சியையும் சேர்த்து ராஜினாமா செய்ய பணிக்கப்பட்டார்.
இது ஒருபக்கம் இருக்க இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் கேஎல் ராகுல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கான பயிற்சியை தொடங்கியுள்ளார். கடந்த முறை தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி ஒரு போட்டியில் இருந்து விலகிய போது, கேஎல் ராகுல் தான் கேப்டனாக செயல்பட்டார். இதனால் தென்னாப்பிரிக்கா மைதானங்களில் ஆடிய போதிய அனுபவம் கேஎல் ராகுலுக்கு உள்ளது.
த்ரோ டவுன் ஸ்பெஷலிட்டை வைத்து பவுன்சர் பந்துகளை வீச வைத்து கேஎல் ராகுல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடரில் கேஎல் ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், அதே ஃபார்மை தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலும் தொடர்வார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் கேஎல் ராகுல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.