அந்த வீரருக்கு மிகப்பெரிய சவால் இது.. 6 மாதங்களாக தயாராகி வருகிறார்.. ராகுல் டிராவிட் நம்பிக்கை!
சென்சுரியன்: டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கேஎல் ராகுலால் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட முடியும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சென்சுரியன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்திய ஏ அணியுடன் டக்ஸ் ஓவல் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடியது.

தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்றதில்லை. இதனால் இம்முறை புதிய வரலாறு படைக்க இந்திய அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட் கேஎல் ராகுல் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பிங் செய்யவுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்படுவது சவால் நிறைந்த ஒன்றாகும். இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், கேஎல் ராகுலுக்கு இது வித்தியசமான சவாலாகும். அதேபோல் அவருக்கு இது சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். இஷான் கிஷனும் அணியில் இல்லாததால், கேஎல் ராகுலை தேடி இந்த வாய்ப்பு வந்துள்ளது. இதனை சிறப்பாக செய்ய முடியும் என்று கேஎல் ராகுலும் உறுதியாக உள்ளார்.
அவர் முழு நேர விக்கெட் கீப்பர் கிடையாது. 50 ஓவர்கள் விக்கெட் கீப்பராக செயல்பட்டு, அதன்பின் பேட்டிங் செய்வதே கடினமான ஒன்றாகும். உடல்ரீதியாக அதிக எனர்ஜியும், மனதளவில் உறுதியும் இருக்க வேண்டும். இதற்காக கடந்த 5 முதல் 6 மாதங்கள் சிறப்பாக தயாராகி வந்துள்ளார். அதேபோல் தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிகமாக பந்து ஸ்பின்னாகாது என்பதால், கேஎல் ராகுல் பணிகள் கொஞ்சம் சுலபமானதாக நினைக்கிறேன்.
இந்திய அணியின் காம்பினேஷனை ஆடுகளம் மற்றும் வானிலை ஆகியவற்றை பார்த்த பின்னரே முடிவு செய்வோம். அதேபோல் வானிலை ஒவ்வொரு நாளும் மாறி வருகிறது என்பதால், அன்றைய நாளில் முடிவெடுப்பது சரியானதாகும். அதேபோல் இந்திய அணியின் பவுலிங் காம்பினேஷன் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் அல்லது 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னராக இருக்கலாம்.
Story first published: Sunday, December 24, 2023, 22:09 [IST]
Other articles published on Dec 24, 2023


Click it and Unblock the Notifications